பாரிஸ்,
இந்திய வீராங்கனை அஸ்மிதா சாலிஹா, ஜப்பானின் மூன்று முறை உலக சாம்பியனான அகானே யமகுச்சியை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
பிரெஞ்சு ஓபன் 2026 பேட்மிண்டன் தொடர் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றில், உலகத் தரவரிசையில் 36-வது இடத்தில் உள்ள 27 வயதான அஸ்மிதா சாலிஹா, யமகுச்சியை எதிர்கொண்டார்.
தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய அஸ்மிதா, முதல் ஆட்டத்தை 21-19 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார். 2-வது ஆட்டத்திலும் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்த அவர், 21-18 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
மொத்தம் 37 நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் 21-19, 21-18 என்ற நேர் ஆட்டங்களில் வெற்றி பெற்ற அஸ்மிதா, காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
ஜப்பானின் அகானே யமகுச்சி மூன்று முறை உலகச் சாம்பியன் பட்டம் வென்றவர். மேலும், இந்த ஆண்டு புதுடெல்லியில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் 2-வது இடம் பிடித்திருந்தார்.
கடந்த வாரம் டென்மார்க் ஓபன் தொடரில் யமகுச்சியிடம் தோல்வியடைந்த அஸ்மிதா, இந்த முறை அவரை வீழ்த்தி பழிதீர்த்துள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் அஸ்மிதா, தனது பேட்மிண்டன் வாழ்க்கையில் முதல்முறையாக பி.டபிள்யூ.எப். சூப்பர் 750 தொடரின் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.