புதுடெல்லி,
இந்திய குத்துச்சண்டை சம்மேளன பொதுச்செயலாளர் பிரமோத் குமார் மீதான நிதிமுறைகேடு புகாரை தொடர்ந்து அவரை இடைநீக்கம் செய்து தலைவர் அஜய் சிங் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த உலகக் கோப்பை குத்துச்சண்டை இறுதி சுற்று போட்டியை ஒளிபரப்பு செய்யும் உரிமத்துக்கான பணி ஆணையை உரிய அனுமதியின்றி வழங்கியது. இமாசலபிரதேசத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் நடக்க இருந்த தேசிய எலைட் ஆண்கள் மற்றும் ஓபன் பெண்கள் குத்துச்சண்டை போட்டியை கடைசி நேரத்தில் ரத்து செய்தது மற்றும் நிதிமு றைகேடு, அதிகார துஷ்பிரயோக புகார்கள் குறித்த விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பது. தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக அங்கீகரிக்கப்படாத சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை கூட்ட முயன்றது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பிரமோத் குமார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உடனடியாக அமலுக்கு வரும் இந்த இடைநீக்கம் விசாரணை முடியும் வரையோ, அல்லது தகுதியுள்ள அதிகாரியால் மறுஉத்தரவு பிறப்பிக்கப்படும் வரையோ தொடரும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. தற்போதைய இடைநீக்க உத்தரவை மீறும் முயற்சிகளை மேற்கொண்டால் சம்மேளன விதிமுறைப்படி மேலும் கடும் நடவடிக்கைக்குள்ளாக நேரி டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.