பெர்த்,
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய பெண்கள் ஆக்கி அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஆட்டம் பெர்த்தில் நேற்று நடந்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டம் வழக்கமான நேரம் முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதைத்தொடர்ந்து வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரில் சமநிலையை எட்டியது. 3-வது ஆட்டம் நாளை நடக்கிறது.