கோண்டா,
2024-ம் ஆண்டு பாரீசில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் கூடுதல் எடை காரணமாக இறுதிப்போட்டிக்கு முன்னதாக தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஓய்வில் இருந்து விடுபடுவதாக சமீபத்தில் அறிவித்த 31 வயதான வினேஷ் போகத் உத்தரபிரதேச மாநிலம் கோண்டாவில் நேற்று தொடங்கிய தேசிய ஓபன் ரேங்கிங் மல்யுத்த போட்டியின் மூலம் களம் திரும்ப முடிவு செய்து இருந்தார்.
இதற்கிடையே, ஒழுங்கு விதிமுறையை மதிக்காதது, ஊக்க மருந்து தடுப்பு விதிமுறையை மீறியது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை வினேஷ் போகத் மீது சுமத்திய இந்திய மல்யுத்த சம்மேளனம் அதற்கு 14 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியது. அத்துடன் அடுத்த மாதம் (ஜூன்) 26-ந்தேதி வரை அவர் எந்தவொரு உள்ளூர் போட்டியிலும் பங்கேற்க தகுதியற்றவர் என்றும் அறிவித்தது.
போட்டியில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்ட நிலையில் வினேஷ் போகத் தேசிய ஓபன் போட்டியில் பங்கேற்க நேற்று கோண்டா சென்றார். தான் போட்டியில் பங்கேற்க தகுதி உடையவர். நான் களம் திரும்புவது குறித்து கடந்த ஆண்டே சர்வதேச மல்யுத்த சம்மேளனத்துக்கு முறைப்படி தெரிவித்து விட்டேன். சம்மேளனத்தின் நோட்டீசுக்கும் பதில் அளித்து விட்டேன் என்று போட்டி அமைப்பு குழு அதிகாரிகளிடம் முறையிட்டார். ஆனால் தங்கள் மீதான ஒழுங்கு விசாரணை இன்னும் முடிவடையாததால் அனுமதி அளிக்க முடியாது என்று அவர்கள் மறுத்து விட்டனர்.
அதன் பிறகு வினேஷ் போகத் நிருபர்களிடம் பேசுகையில், 'நான் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். நான் சன்னியாசம் எடுத்துக் கொண்டு விலகி இருக்க வேண்டுமா? தோல்வியை ஒத்துக்கொள்ள வேண்டுமா? அப்போது தான் எனக்கு எதிரான அவர்களது சதி வெற்றி பெறுமா? நான் மல்யுத்தத்தை விட்டு விலக வேண்டும் என்று இந்திய சம்மேளன தலைவர் நினைக்கிறார். நான் மல்யுத்த களம் திரும்ப தொடர்ந்து போராடுவேன்' என்றார்.
தேசிய ஓபன் போட்டியில் நேற்று வீரர், வீராங்கனைகளுக்கு எடை சோதனை நடைபெற்றது. இன்று பந்தயங்கள் நடக்கின்றன.