சமர்கண்ட்,
செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா ‘ஹாட்ரிக்’ வெற்றியை பெற்றுள்ளது.
உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் 46-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஓபன் பிரிவில் 208 அணிகளும், பெண்கள் பிரிவில் 192 அணிகளும் பங்கேற்றுள்ளன. நேற்று 3-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.
நடப்பு சாம்பியனான இந்திய அணி, 3-வது சுற்றில் இத்தாலியை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 3-1 என்ற புள்ளி கணக்கில் இத்தாலியை வீழ்த்தியது. இதன் மூலம் இந்தியா தொடர்ந்து 3-வது வெற்றியை பதிவு செய்து ‘ஹாட்ரிக்’ வெற்றியை பெற்றது.
இந்திய வீரர்கள் நிஹால் சரின், குகேஷ் ஆகியோர் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்றனர். பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி ஆகியோரின் ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.
பெண்கள் பிரிவிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடி தொடர்ந்து 3-வது வெற்றியை பதிவு செய்தது.
கிரீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 3½-½ என்ற புள்ளி கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணியில் கோனெரு ஹம்பி, வந்திகா அகர்வால், சவிதா ஸ்ரீ ஆகியோர் வெற்றி பெற்றனர். திவ்யா தேஷ்முக் ஆடிய ஆட்டம் டிராவில் முடிந்தது.
இதன் மூலம் ஓபன் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளிலும் இந்திய அணிகள் தொடர்ந்து 3 வெற்றிகளை பெற்று அசத்தியுள்ளன.