பிற விளையாட்டு

உலக கைமல்யுத்த சாம்பியன்ஷிப்: முதல் 2 நாட்களில் இந்தியாவுக்கு 20 பதக்கங்கள்

இதில் மாஸ்டர்ஸ் பிரிவில் இந்திய வீரர், வீராங்கனைகள் 12 பதக்கங்களை வென்றுள்ளனர்.

புதுடெல்லி,

டெல்லியில் நடைபெற்று வரும் 47-வது உலக கைமல்யுத்த சாம்பியன்ஷிப் மற்றும் 28-வது உலக மாற்றுத்திறனாளிகளுக்கான கைமல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்திய அணி முதல் இரண்டு நாட்களில் 20 பதக்கங்களைக் குவித்து அசத்தியுள்ளது.

மாஸ்டர்ஸ் பிரிவில் 12 பதக்கங்கள்

47-வது உலக கைமல்யுத்த சாம்பியன்ஷிப் மற்றும் 28-வது உலக மாற்றுத்திறனாளிகளுக்கான கைமல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் கிழக்கு டெல்லியில் உள்ள தி லீலா அம்பியன்ஸ் கன்வென்ஷன் ஹோட்டலில் நடைபெற்று வருகின்றன.

இதில் மாஸ்டர்ஸ் பிரிவில் இந்திய வீரர், வீராங்கனைகள் 4 தங்கம், ஒரு வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கங்களை வென்றுள்ளனர்.

கிராண்ட் மாஸ்டர் பெண்கள் 80 கிலோ எடைப் பிரிவில் ஜின்சிமோல் செபாஸ்டியன் வலது கை, இடது கை என இரு பிரிவுகளிலும் தங்கப் பதக்கங்களை வென்றார். இதன் மூலம் இந்தியாவுக்காக இரட்டைத் தங்கம் வென்ற ஒரே வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.

மாஸ்டர் பெண்கள் 80 கிலோ எடைப் பிரிவில் யோகேஷ் சவுத்ரி வலது கையில் தங்கமும், இடது கையில் வெண்கலமும் வென்றார். மாஸ்டர் ஆண்கள் 60 கிலோவுக்கு உட்பட்ட பிரிவில் ஷௌகத் வி.டி. வலது கையில் தங்கமும், இடது கையில் வெண்கலமும் கைப்பற்றினார்.

கிராண்ட் மாஸ்டர் பெண்கள் 80 கிலோ பிரிவில் மினிமோல் ஜோஸ் வெள்ளிப் பதக்கமும், பிரீதா சி. வெண்கலப் பதக்கமும் வென்றனர். மாஸ்டர் பெண்கள் 80 கிலோ பிரிவில் பிரியா பையன், கிராண்ட் மாஸ்டர் பெண்கள் 70 கிலோ பிரிவில் மினி கே. ஆகியோர் வலது கை, இடது கை என இரண்டிலும் வெண்கலப் பதக்கங்களைப் பெற்றனர்.

இளைஞர் பிரிவு

இளைஞர் பிரிவில் ஜிம்மிசன் மார்வெய்ன், யூத் ஆண்கள் 65 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஜூனியர் ஆண்கள் 90 கிலோவுக்கு மேற்பட்ட பிரிவில் ஆபாஸ் ராணா, யூத் ஆண்கள் 55 கிலோவுக்குட்பட்ட பிரிவில் லைதான்சங்கா, 60 கிலோ பிரிவில் அஜய் குமார், யூத் பெண்கள் 80 கிலோ பிரிவில் விஷ்ணுப்ரியா பி. ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

சப்-ஜூனியர் பிரிவில் 3 வெண்கலங்கள்

சப்-ஜூனியர் ஆண்கள் பிரிவில் ஆர்யன் சிங் 45 கிலோவுக்குட்பட்ட பிரிவிலும், யும்னம் சிங்ஹெய் சிங் 50 கிலோ பிரிவிலும், ஷேன் சாலிஷ் 70 கிலோ பிரிவிலும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

இதன்மூலம், முதல் இரண்டு இறுதிப்போட்டி நாட்களில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. நவம்பர் 7-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் மேலும் பதக்கங்களைக் குவிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம், ஒட்டுமொத்த பதக்கப் பட்டியலில் ரஷ்யா, கஜகஸ்தான், துருக்கி ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா 4-வது இடத்தைப் பிடித்துள்ளது.

SCROLL FOR NEXT