புதுடெல்லி,
47-வது உலகக் கைமல்யுத்த சாம்பியன்ஷிப் மற்றும் 28-வது உலக பாரா கைமல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் டெல்லியில் கோலாகலமாக நிறைவடைந்தது. இந்தியாவில் முதன்முறையாக நடைபெற்ற இந்தத் தொடரில் இந்திய அணி 9 தங்கம், 19 வெள்ளி, 31 வெண்கலம் என மொத்தம் 59 பதக்கங்களைக் கைப்பற்றியது.
47-வது உலகக் கைமல்யுத்த சாம்பியன்ஷிப் மற்றும் 28-வது உலக பாரா கைமல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் கிழக்கு டெல்லியில் உள்ள லீலா ஆம்பியன்ஸ் கன்வென்ஷன் ஹோட்டலில் நடைபெற்றது. இந்தத் தொடரில் 60-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
இந்த தொடரின் ஒட்டுமொத்தப் பதக்க பட்டியலில் ரஷ்யா முதலிடத்தையும், கஜகஸ்தான் 2-வது இடத்தையும், துருக்கி 3-வது இடத்தையும் பிடித்தன.
துருக்கியின் மேலெக் செலிக், எஸ்ரா கிராஸ், கஜகஸ்தானின் உல்பொசின் எல்முராட், எர்டுவாலெட் நூர்மாகன், ஜார்ஜியாவின் இரினா டிரியேவா, தெங்கிசி நாட்ஸ்விலிஷ்விலி ஆகிய 6 வீரர்கள் வலது கை, இடது கை என இரு பிரிவுகளிலும் தங்க பதக்கங்களை வென்றனர்.
இந்திய அணி மொத்தம் 59 பதக்கங்களை வென்றது. இதில் 9 தங்கம், 19 வெள்ளி, 31 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும்.
பாரா பிரிவில் இந்திய வீரர்கள் 2 தங்கம், 10 வெள்ளி, 14 வெண்கலம் என 26 பதக்கங்களை வென்றனர். இதன் மூலம் பாரா பிரிவுக்கான பதக்கப் பட்டியலில் இந்தியா 5-வது இடத்தைப் பிடித்தது.
கிராண்ட் மாஸ்டர் பெண்கள் 80 கிலோ பிரிவில் ஜின்சிமோல் செபாஸ்டியன் வலது கை, இடது கை என இரு பிரிவுகளிலும் தங்கப் பதக்கங்களை வென்றார்.
யோகேஷ் சௌத்ரி மற்றும் சௌகத் வி.டி. ஆகியோர் வலது கைப் பிரிவில் தங்கமும், இடது கைப் பிரிவில் வெண்கலமும் வென்றனர். சீனியர் பெண்கள் 70 கிலோ வலது கைப் பிரிவில் மதுரா கே.என். வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
அடுத்த ஆண்டுக்கான உலகக் கைமல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் கனடாவில் நடைபெறவுள்ளது.
இதற்கிடையே, இந்தியாவில் ப்ரோ பஞ்சா லீக் சார்பில் நடைபெறும் 'பூனவல்லா கோல்டு எடிஷன் 2' தொடர் வரும் நவம்பர் 28-ம் தேதி புனேவில் தொடங்குகிறது. இதில் உலக சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற யோகேஷ் சௌத்ரி, ஹர்கோமல் சிங் கில், ஆபாஸ் ராணா உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.