பிற விளையாட்டு

உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்; 3 பதக்கங்களை வென்று இந்தியா அசத்தல்

இந்திய வீரர், வீராங்கனைகள், 2028-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்கான ஒதுக்கீட்டில் இடம் பிடிக்க தவறி விட்டனர்.

தோஹா

உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் 3 பதக்கங்களை வென்று இந்தியா அசத்தியுள்ளது.

உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடர் கத்தார் நாட்டின் தோஹா நகரத்தில் நடைபெற்று வருகிறது. இதில், நேற்று நடந்த போட்டிகளில் இந்தியா ஒரு தங்கம் மற்றும் 2 வெள்ளி என 3 பதக்கங்களை வென்று பதக்க வேட்டையை தொடங்கியுள்ளது.

தங்கப்பதக்கம்

இதில், ஆண்களுக்கான 50 மீட்டர் பிஸ்டல் குழு போட்டியில் இந்தியா தங்கப்பதக்கம் வென்று அசத்தியது. ரவீந்தர் சிங், சவுரப் சவுத்ரி, அமன்பிரீத் சிங் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, மொத்தம் 1,659 புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்தது.

இந்திய அணியில் ரவீந்தர் சிங் 559 புள்ளிகளும், சவுரப் சவுத்ரி 551 புள்ளிகளும், அமன்பிரீத் சிங் 549 புள்ளிகளும் எடுத்தனர். சீனா 1,648 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தையும், தென்கொரியா 1,643 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கத்தையும் வென்றன.

வெள்ளிப்பதக்கங்கள்

இதேபோன்று, ஆண்களுக்கான 50 மீட்டர் பிஸ்டல் தனிநபர் பிரிவிலும் இந்தியாவின் ரவீந்தர் சிங் சிறப்பாக செயல்பட்டு வெள்ளிப்பதக்கம் வென்றார்.

பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் குழு போட்டியில் இந்தியா வெள்ளிப்பதக்கம் வென்றது. இந்தியாவின் இளவேனில் வாலறிவன், சோனம் மஸ்கார் மற்றும் சாம்பவி ஷீர்சாகர் ஆகியோர் அடங்கிய இந்திய அணி மொத்தம் 1,894.4 புள்ளிகளுடன் இந்த வெற்றியை பெற்றது.

ஒலிம்பிக் போட்டி

சீனா 1,899.8 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தையும், ஜப்பான் 1,892.6 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கத்தையும் வென்றன.

எனினும் இந்திய வீரர், வீராங்கனைகள், 2028-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்கான ஒதுக்கீட்டில் இடம் பிடிப்பதற்கான வாய்ப்பை தவற விட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT