கிளாஸ்கோ,
காமன்வெல்த் விளையாட்டு குத்துச்சண்டையில் மேலும் 6 இந்திய வீரர், வீராங்கனைகள் அரைஇறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தனர்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்து வரும் காமன்வெல்த் விளையாட்டில் 7-வது நாளான நேற்று குத்துச்சண்டை போட்டியில் 6 இந்திய வீரர், வீராங்கனைகள் அபாரமாக செயல்பட்டு அரைஇறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தனர். குத்துச்சண்டையில் அரைஇறுதிக்கு தகுதி பெற்றாலே குறைந்தபட்சம் வெண்கலப்பதக்கம் கிடைக்கும்.
பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவின் கால்இறுதியில் இந்திய வீராங்கனை சாக்ஷி சவுத்ரி, வடக்கு அயர்லாந்தின் கேத்லின் பிரையர்சை சந்தித்தார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சாக்ஷி சவுத்ரி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதியை எட்டி பதக்கத்தை உறுதிப்படுத்தினார்.
70 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை அருந்ததி சவுத்ரி, நியூசிலாந்தின் மோர்கன் ஹென்டர்சனுடன் மோதினார். விறுவிறுப்பான இந்த மோதலில் அருந்ததி சவுத்ரி 4-1 என்ற கணக்கில் மோர்கன் ஹென்டர்சனை வெளியேற்றி அரைஇறுதியை எட்டினார்.
ஆண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் சச்சின் சிவாச், டிரெஷர் மோரெமியை (போஸ்ட்வானா) எதிர்கொண்டார். சச்சின் சிவாச்சின் சரமாரியான குத்துக்களை சமாளிக்க முடியாமல் டிரெஷர் தடுமாறினார். அவருக்கு கண் பகுதியில் காயமும் ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை பெற்றுக் கொண்டு தொடர்ந்து போராடினார். முடிவில் சச்சின் சிவாச் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.
80 கிலோ எடைப்பிரிவின் கால்இறுதியில் இந்திய வீரர் அங்குஷ் பன்ஹால், ஜேட்மைகாக்குடன் (செசல்ஸ்) மல்லுக்கட்டினார். ஆக்ரோஷமாக குத்துகளை விட்டு திணறடித்த அங்குஷ் 5-0 என்ற கணக்கில் மைகாக்கை தெறிக்கவிட்டார்.
90 கிலோவுக்கு மேற்பட்ட எடைப்பிரிவின் கால்இறுதியில் இந்திய வீரர் நரேந்தர் பெர்வால், மைக்கேல் செகோவை (சமோவா) சந்தித்தார். மைக்கேல் செகோ கடும் சவால் அளித்தாலும் நரேந்தர் பெர்வால் தனது அனுபவம் மற்றும் உத்வேகமான தாக்குதலால் 3-2 என்ற கணக்கில் மைக்கேல் செகோவை சாய்த்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.
57 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை ஜெய்ஸ்மின் லம்போரியா, இங்கிலாந்தின் எலிஸ் கிளைனை 4-1 என்ற கணக்கில் விரட்டியடித்து அரைஇறுதி சுற்றை அடைந்தார்.
குத்துச்சண்டையை பொறுத்தமட்டில் இதுவரை 10 இந்தியர்கள் பதக்கத்தை உறுதி செய்து இருக்கின்றனர். ஏற்கனவே வீராங்கனைகள் லவ்லினா, பிரீத்தி பவார், பிரியா கங்ஹாஸ், வீரர் ஜதுமணி ஆகியோர் அரைஇறுதிக்குள் நுழைந்தனர்.