டக்கார்,
இளையோர் ஒலிம்பிக் போட்டியில் ஜூடோவில் இந்திய வீராங்கனை குஷ்பு வெள்ளி வென்று அசத்தியுள்ளார்.
செனகல் நாட்டின் தகார் நகரில் இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. அக்டோபர் 31-ம் தேதி தொடங்கி நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில், இன்று நடைபெற்ற பெண்களுக்கான 63 கிலோ எடைப்பிரிவு ஜூடோ இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை குஷ்பு ஜெர்மனியின் ஜோலினா ரெய்ன்ஹோல்டை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் ரெய்ன்ஹோல்ட் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். குஷ்பு வெள்ளிப் பதக்கம் வென்றார்.
15 வயதான குஷ்பு, இளையோர் ஒலிம்பிக் ஜூடோ போட்டியில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இதற்கு முன்பு, மணிப்பூரைச் சேர்ந்த தபாபி தேவி, 2018-ம் ஆண்டு அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்ற இளையோர் ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 44 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.
குஜராத்தை சேர்ந்த குஷ்பு, இந்த ஆண்டில் நடைபெற்ற ஆசிய கெடட் ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 63 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். தற்போது இளையோர் ஒலிம்பிக்கிலும் வெள்ளி வென்று தனது சர்வதேச சாதனையைத் தொடர்ந்துள்ளார்.