கத்தார் தலைநகர் தோகாவில் புரொபஷனல் ஸ்குவாஷ் சங்கம் (PSA) சார்பி சர்வதேச ஸ்குவாஷ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்தத் தொடரில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் வேலவன் செந்தில்குமார், எகிப்தின் ஓமர் சைத்தை எதிர்கொண்டார். இதில் தொடக்கம் முதலே இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. முதல் செட்டில் இருவரும் புள்ளிகளைக் கைப்பற்றுவதில் தீவிரம் காட்டினர். இருப்பினும் நிதானமாக விளையாடிய வேலவன் 11-9 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார்.
தொடர்ந்து இரண்டாவது செட்டில் முழுமையான ஆதிக்கம் செலுத்திய வேலவன், எதிராளிக்கு அதிக வாய்ப்பளிக்காமல் 11-1 என்ற கணக்கில் எளிதில் வெற்றி பெற்றார். மூன்றாவது செட்டில் ஓமர் சைத் கடுமையாகப் போராடினார். இருப்பினும் முக்கியமான தருணங்களில் சிறப்பாக விளையாடிய வேலவன் 13-11 என்ற கணக்கில் அந்த செட்டையும் கைப்பற்றினார். இதன் மூலம் 11-9, 11-1, 13-11 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறினார்.