பிற விளையாட்டு

சர்வதேச ஸ்குவாஷ் ஓபன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீரர் வேலவன்

2024-ம் ஆண்டு நடந்த போட்டியில் வேலவனும், 2019-ம் ஆண்டு நடந்த போட்டியில் அங்கேரி வீரரும் வெற்றி பெற்றனர்.

புடாபெஸ்ட்

சர்வதேச ஸ்குவாஷ் ஓபன் இறுதிப்போட்டிக்கு இந்திய வீரர் வேலவன் முன்னேறியுள்ளார்.

புடாபெஸ்ட் ஓபன் சர்வதேச ஸ்குவாஷ் போட்டி அங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்ட்டில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில், உலக தர வரிசையில் 54-வது இடம் வகிக்கும் இந்தியாவை சேர்ந்த வீரர் வேலவன் செந்தில்குமார் 9-11, 11-8, 11-7, 1-11, 12-10 என்ற செட் கணக்கில் சக நாட்டவரான வீர் சோத்ரானியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார்.

3-வது முறை

இறுதி சுற்றில் அவர், போட்டியை நடத்தும் அங்கேரி நாட்டை சேர்ந்த வீரர் பாலாஸ் பர்காசை எதிர்கொள்ள இருக்கிறார். இவர்கள் இருவரும் இதற்கு முன் 2 முறை மோதியுள்ளனர். அப்போது 2024-ம் ஆண்டு நடந்த போட்டியில் வேலவனும், 2019-ம் ஆண்டு நடந்த போட்டியில் அங்கேரி வீரரும் வெற்றி பெற்றனர்.

3-வது முறையாக தற்போது அவர்கள் போட்டியிட உள்ளனர். இதற்கு முன்பு வேலவன் செந்தில் குமார், மலேசியாவை சேர்ந்த எய்ன் யோவ் இங்கை காலிறுதியில் எதிர்கொண்டார்.

வேலவன் வெற்றி

இந்த போட்டியில், தொடக்கம் முதல் வேலவன் அதிரடியாக விளையாடினார். இதனால், மொத்தம் 53 நிமிடங்கள் நடந்த போட்டியின் முடிவில், 11-2, 11-9, 11-8 என்ற புள்ளி கணக்கில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட எய்னை எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.