பிற விளையாட்டு

ஆசிய விளையாட்டில் வரலாறு படைத்த ஜெய் மீனா... சாப்ட் டென்னிஸில் இந்தியாவுக்கு வெண்கலம்

பதக்கப்பட்டியலில் 10 பதக்கங்களுடன் இந்தியா 8-வது இடத்தில் உள்ளது.

நகோயா,

ஆசிய விளையாட்டு சாப்ட் டென்னிஸில் இந்தியாவின் ஜெய் மீனா வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.

ஆசிய விளையாட்டு

20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, ஜப்பான், சீனா, தென்கொரியா உள்பட 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

வரலாறு படைத்த ஜெய் மீனா

இந்த ஆசிய விளையாட்டு போட்டியில் சாப்ட் டென்னிஸ் பிரிவில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஜெய் மீனா வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.

அரையிறுதியில் தோல்வி

அரையிறுதிப் போட்டியில் ஜெய் மீனா, ஜப்பானின் தகுயா குரோசகாவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜெய் மீனா 2-4 என்ற கணக்கில் குரோசகாவிடம் தோல்வியடைந்தார்.

முதல் 3 செட்களையும் இழந்த ஜெய் மீனா, அதன்பிறகு சிறப்பாக விளையாடி 4-வது மற்றும் 5-வது செட்களை கைப்பற்றினார். இதனால் ஆட்டத்தில் 2-3 என்ற நிலை ஏற்பட்டது. எனினும், 6-வது செட்டில் குரோசகா 4-2 என்ற கணக்கில் வென்றார்.

இந்தியாவுக்கு முதல் பதக்கம்

சாப்ட் டென்னிஸ் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறும் வீரர்களுக்கு பதக்கம் உறுதி என்பதால், காலிறுதியில் பெற்ற வெற்றியின் மூலம் ஜெய் மீனா ஏற்கனவே இந்தியாவுக்கான பதக்கத்தை உறுதி செய்திருந்தார்.

இதன் மூலம் ஆசிய விளையாட்டு வரலாற்றில் சாப்ட் டென்னிஸ் பிரிவில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. இந்த வரலாற்றுச் சாதனையை ஜெய் மீனா படைத்துள்ளார்.

இந்தியா 8-வது இடம்

இந்த வெண்கலப் பதக்கத்தின் மூலம், ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் 7 பதக்கங்கள், கிரிக்கெட்டில் 1 தங்கம் மற்றும் கலப்பு தற்காப்புக் கலையில் (MMA) சுசிகா தரியால் வென்ற வெண்கலம் உட்பட இந்தியாவின் ஒட்டுமொத்த பதக்கங்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. பதக்கப்பட்டியலில் 60 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் இருக்க, இந்தியா 8-வது இடத்தில் உள்ளது.

SCROLL FOR NEXT