குமாமோட்டோ,
ஜப்பானில் நடைபெற்று வரும் குமாமோட்டோ மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் திரீசா ஜாலி - காயத்ரி கோபிசந்த் ஜோடி வெற்றியுடன் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது.
ஜப்பானில் குமாமோட்டோ மாகாண விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில், உலகத் தரவரிசையில் 20-வது இடத்தில் உள்ள இந்தியாவின் திரீசா ஜாலி - காயத்ரி கோபிசந்த் ஜோடி, 13-வது இடத்தில் இருந்த ஜப்பானின் ஹினாட்டா சுசுகி - நாவ் யமகிதா ஜோடியை எதிர்கொண்டது.
இதில் முதல் செட்டில் 4-8 எனப் பின்தங்கியிருந்த இந்திய வீராங்கனைகள், அடுத்தடுத்து 7 புள்ளிகளைப் பெற்று 11-8 என முன்னிலை பெற்றனர். தொடர்ந்து சிறப்பாக விளையாடி முதல் செட்டை 21-17 எனக் கைப்பற்றினர்.
இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய திரீசா - காயத்ரி ஜோடி, 21-14 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 42 நிமிடங்களில் போட்டியை முடித்து, அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
இந்தியாவிடம் தோல்வியடைந்த ஹினாட்டா சுசுகி - நாவ் யமகிதா ஜோடி, இந்த ஆண்டின் கனடா ஓபன் பட்டத்தை வென்றிருந்தது. மேலும், கடந்த மாதம் நடைபெற்ற டென்மார்க் ஓபன் தொடரில் 2-வது இடத்தையும் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.