லண்டன்,
லண்டனில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் கென்ய வீரர் செபஸ்டியன் சாவே புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
இன்று லண்டனில் நடைபெற்ற புகழ்பெற்ற மாரத்தான் போட்டியில், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைசிறந்த வீரர்கள் பங்கேற்றனர். இதில் 42.2 கிலோமீட்டர் தூரத்தை கென்யாவின் செபஸ்டியன் சாவே அதிவேகமாகக் கடந்து முதலிடம் பிடித்தார்.
அவர் எடுத்துக்கொண்ட நேரம் 1 மணி நேரம் 59 நிமிடங்கள் 30 வினாடிகள். 2023-ல் சிகாகோவில் மறைந்த கெல்வின் கிப்டம் படைத்த சாதனையை (2 மணி நேரம் 35 வினாடிகள்), சாவே 65 வினாடிகள் முன்னதாகவே கடந்து முறியடித்துள்ளார். இதன் மூலம், அதிகாரப்பூர்வ மாரத்தான் போட்டியில் 2 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் இலக்கை எட்டிய முதல் மனிதர் என்ற பெருமையை 29 வயதான செபஸ்டியன் சாவே பெற்றுள்ளார். உகாண்டாவின் யோமிப் கெஜலிச்சா 1 மணி நேரம் 59 நிமிடங்கள் 41 வினாடிகளில் கடந்து 2வது இடத்தை பிடித்தார்.
போட்டிக்கு முன்னதாக, நிருபர் ஒருவருக்கு பேட்டியளித்த செபஸ்டியன் சாவே, என்றாவது ஒருநாள் 2 மணி நேரத்திற்கு முன்னதாக போட்டியை கடக்கும் ஒரு நபராக நான் இருப்பேன் என்று கூறியிருந்ததது குறிப்பிடத்தக்கது.