கிளாஸ்கோ,
காமன்வெல்த் விளையாட்டில் பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீரர் லவ்பிரீத் சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 74 நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்று பதக்க வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் ஆண்கள் 110 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீரர் லவ்ப்ரீத் சிங் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெள்ளிப் பதக்கத்தை வென்றார். ஸ்னாட்ச் பிரிவில் 168 கிலோ, 173 கிலோ மற்றும் 176 கிலோ என மூன்று முயற்சிகளையும் வெற்றிகரமாக நிறைவு செய்து சிறப்பாக தொடங்கினார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் முதல் முயற்சியிலேயே 205 கிலோவை வெற்றிகரமாகத் தூக்கிய லவ்ப்ரீத் சிங், இரண்டாவது முயற்சியில் 212 கிலோவையும் வெற்றிகரமாக தூக்கினார். இறுதி முயற்சியில் 217 கிலோவை அவரால் நிறைவு செய்ய முடியவில்லை.
நியூசிலாந்தின் டேவிட் லிட்டி 223 கிலோவை வெற்றிகரமாக தூக்கி, மொத்தம் 389 கிலோ எடையுடன் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
மறுபுறம், லவ்ப்ரீத் சிங் 176 கிலோ (ஸ்னாட்ச்) மற்றும் 212 கிலோ (கிளீன் அண்ட் ஜெர்க்) என மொத்தம் 388 கிலோ தூக்கி, வெறும் ஒரு கிலோ வித்தியாசத்தில் தங்கத்தை தவறவிட்டு வெள்ளிப் பதக்கத்தை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.