பிற விளையாட்டு

“அடுத்த முறை தங்கத்தோடுதான் வீட்டிற்கு வருவேன்” - இளையோர் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை

பதக்கம் வென்ற பிறகு பேட்டியில் பேசிய லான்சென்பி சானு, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இம்பால்,

“அடுத்த முறை நிச்சயம் தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்ப்பேன்” என இளையோர் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வூஷூ வீராங்கனை ராஜ்குமாரி லான்சென்பி சானு நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

முதல் இந்திய வீராங்கனை

செனிகல் நாட்டின் டாக்கர் நகரில் நடைபெற்ற 2026 இளையோர் ஒலிம்பிக் போட்டியில், மணிப்பூரைச் சேர்ந்த 15 வயதான லான்சென்பி சானு வூஷூ விளையாட்டின் மகளிர் சாங்குவான் ஒருங்கிணைந்த பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் இளையோர் ஒலிம்பிக் வரலாற்றில் வூஷூ பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.

இந்தப் போட்டியில் அவர் மொத்தம் 18.039 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தைப் பிடித்தார். குன்ஷு பிரிவில் 8.723 புள்ளிகளும், சாங்குவான் பிரிவில் 9.316 புள்ளிகளும் பெற்றார்.

தங்கம் வெல்வேன்

பதக்கம் வென்ற பிறகு பேட்டியில் பேசிய லான்சென்பி சானு, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

“இளையோர் ஒலிம்பிக்கில் வூஷூ போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் பதக்கத்தை எனக்கு ஊக்கமும் ஆதரவும் அளித்த பயிற்சியாளர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அர்ப்பணிக்கிறேன்.

இந்தப் போட்டியில் தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் வெல்வேன் என்று எதிர்பார்த்தேன். ஆனால், சில தவறுகள் செய்ததால் வெண்கலப் பதக்கமே கிடைத்தது. அந்தத் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, அடுத்த முறை சிறப்பாக விளையாடி நிச்சயம் தங்கப் பதக்கத்தோடுதான் வீட்டிற்கு வருவேன்” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT