தோஹா,
கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வரும் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில், தமிழகத்தைச் சேர்ந்த நிவேதிதா நாயர் தனிநபர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
மகளிர் 25 மீட்டர் ஸ்டாண்டர்ட் பிஸ்டல் பிரிவில் நடைபெற்ற போட்டியில் நிவேதிதா 567 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார். சீனாவின் சியாவ் ஜியாருயிக்சுவான் 569 புள்ளிகளுடன் தங்கப் பதக்கமும், ஹங்கேரியின் வெரோனிகா மேஜர் 568 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.
இதே பிரிவில் பங்கேற்ற மற்ற இந்திய வீராங்கனைகளான மான்வி ஜெயின் 560 புள்ளிகளுடன் 8-வது இடத்தையும், சிம்ரன்பிரீத் கவுர் பிரார் 555 புள்ளிகளுடன் 10-வது இடத்தையும் பிடித்தனர்.
மகளிர் 25 மீட்டர் ஸ்டாண்டர்ட் பிஸ்டல் அணிப் பிரிவில் நிவேதிதா நாயர், மான்வி ஜெயின், சிம்ரன்பிரீத் கவுர் பிரார் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1682 புள்ளிகள் குவித்து வெள்ளிப் பதக்கம் வென்றது.
சீன அணி 1698 புள்ளிகளுடன் உலகச் சாதனை படைத்து தங்கம் வென்றது. ஹங்கேரி அணி 1676 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றது.
ஆண்கள் 25 மீட்டர் ஸ்டாண்டர்ட் பிஸ்டல் தனிநபர் பிரிவில் இந்தியாவின் ஹர்ஷ் குப்தா 573 புள்ளிகளுடன் 5-வது இடத்தையும், உதித் ஜோஷி 562 புள்ளிகளுடன் 18-வது இடத்தையும், ஜடின் 559 புள்ளிகளுடன் 28-வது இடத்தையும் பிடித்தனர்.
அணிப் பிரிவில் இந்தியா 4-வது இடத்தைப் பிடித்தது. இதனால் அந்தப் பிரிவில் இந்தியாவுக்குப் பதக்கம் கிடைக்கவில்லை.
நேற்று நடைபெற்ற போட்டிகளின் முடிவில், தோஹா உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியா இதுவரை ஒரு தங்கம், 5 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளது.
ஆண்கள் 50 மீட்டர் பிஸ்டல் அணிப் பிரிவு: தங்கம் - ரவீந்தர் சிங், சவுரப் சவுத்ரி, அமன்பிரீத் சிங்.
ஆண்கள் 50 மீட்டர் பிஸ்டல் தனிநபர் பிரிவு: வெள்ளி - ரவீந்தர் சிங்.
மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிப் பிரிவு: வெள்ளி - இளவேனில் வாலறிவன், சோனம் மாஸ்கர், ஷாம்பவி க்ஷிர்சாகர்.
மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணிப் பிரிவு: வெள்ளி - மனு பாக்கர், சுருச்சி சிங், சைன்யம்.
ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர் பிரிவு: வெள்ளி - ஜெய்பால் மால்வியா. இதன் மூலம் லாஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக் போட்டிக்கான துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியா தனது முதல் ஒலிம்பிக் கோட்டாவைப் பெற்றது.
மகளிர் 25 மீட்டர் ஸ்டாண்டர்ட் பிஸ்டல் அணிப் பிரிவு: வெள்ளி - நிவேதிதா நாயர், மான்வி ஜெயின், சிம்ரன்பிரீத் கவுர் பிரார்.
மகளிர் 25 மீட்டர் ஸ்டாண்டர்ட் பிஸ்டல் தனிநபர் பிரிவு: வெண்கலம் - நிவேதிதா நாயர்.