பிற விளையாட்டு

நார்வே செஸ் 2026: பிரக்ஞானந்தா, குகேஷ் அசத்தல்... கார்ல்சன் அதிர்ச்சி தோல்வி

பிரக்ஞானந்தா மற்றும் குகேஷ் ஆகியோர் அர்மகெடான் டைபிரேக்கரில் வெற்றி பெற்று அசத்தியுள்ளனர்.

ஓஸ்லோ,

நார்வே செஸ் 2026 தொடர் ஆஸ்லோ நகரில் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. முதல் சுற்றிலேயே பல பரபரப்பான முடிவுகள் பதிவாகியுள்ளன. இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர்களான பிரக்ஞானந்தா மற்றும் குகேஷ் ஆகியோர் அர்மகெடான் டைபிரேக்கரில் வெற்றி பெற்று அசத்தியுள்ளனர்.

கார்ல்சனுக்கு அதிர்ச்சி

முதல் சுற்றின் மிகப்பெரிய அதிர்ச்சியாக, உலக நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சன் கிளாசிகல் ஆட்டத்திலேயே தோல்வியை சந்தித்தார். பிரான்ஸ் கிராண்ட்மாஸ்டரான அலிரேசா பிரூஸ்ஜா, கார்ல்சனை வீழ்த்தி முதல் சுற்றின் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தார்.

பிரக்ஞானந்தாவின் போராட்ட வெற்றி

பிரக்ஞானந்தா மற்றும் வெஸ்லி சோ இடையேயான கிளாசிகல் ஆட்டம் டிராவில் முடிந்தது. இதையடுத்து நடைபெற்ற அர்மகெடான் டைபிரேக்கரில் பிரக்ஞானந்தா சிறப்பாக விளையாடி வெஸ்லி சோவை வீழ்த்தினார்.

குகேஷ் அபாரம்

உலக சாம்பியனான குகேஷ் ஜெர்மனியின் வின்சென்ட் கீமரை எதிர்கொண்டார். கிளாசிகல் ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் கெய்மர் வெற்றியை நோக்கி நகர்ந்தநிலையில், குகேஷ் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி போட்டியை டிராவுக்கு கொண்டு சென்றார். பின்னர் நடைபெற்ற அர்மகெடான் சுற்றில் ஆதிக்கம் செலுத்திய குகேஷ் வெற்றியை தன்வசப்படுத்தினார்.

மகளிர் பிரிவில் திவ்யா தேஷ்முக் அசத்தல்

இந்தியாவின் திவ்யா தேஷ்முக், நடப்பு மகளிர் உலக சாம்பியனான ஜு வெஞ்சனை எதிர்கொண்டார். கடுமையான போராட்டத்திற்குப் பிறகு கிளாசிகல் ஆட்டம் டிராவில் முடிந்தது. ஆனால் அர்மகெடான் டைபிரேக்கரில் திவ்யா அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி உலக சாம்பியனை வீழ்த்தி சாதனை படைத்தார்.

ஹம்பிக்கு அதிர்ச்சி தோல்வி

இந்தியாவின் முன்னணி வீராங்கனையான கோனேரு ஹம்பி, கசகஸ்தானின் பிபிசாரா அஸ்ஸௌபாயேவாவிடம் கிளாசிகல் ஆட்டத்திலேயே தோல்வியடைந்தார். மிடில்கேமில் கிடைத்த சாதகமான நிலையை சிறப்பாக பயன்படுத்திய பிபிசரா, ஹம்பியை வீழ்த்தி மகளிர் பிரிவில் முக்கிய வெற்றியை பதிவு செய்தார்.

புள்ளிப்பட்டியலில் முன்னிலை

முதல் சுற்று முடிவில்:

ஓபன் பிரிவில் அலிரேசா பிரூஸ்ஜா முன்னிலையில் உள்ளார்.

மகளிர் பிரிவில் பிபிசாரா அஸ்ஸௌபாயேவா முதலிடத்தை பிடித்துள்ளார்.

இந்திய வீரர்கள் அர்மகெடான் சுற்றுகளில் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டம், தொடரின் அடுத்த சுற்றுகளுக்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக பிரக்ஞானந்தா, குகேஷ் மற்றும் திவ்யா தேஷ்முக் ஆகியோரின் வெற்றிகள் இந்திய ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளன.