ஆஸ்லோ,
14-வது நார்வே சர்வதேச செஸ் போட்டி ஆஸ்லோ நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 வீரர், வீராங்கனைகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும்.
பிரக்ஞானந்தா அபாரம்
விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த போட்டியில் ஓபன் பிரிவில் நேற்று முன்தினம் இரவு நடந்த 9-வது சுற்றில் தமிழக கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, சக நாட்டவரும், உலக சாம்பியனுமான குகேசை எதிர் கொண்டார். இதில் கருப்புநிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 34-வது நகர்த்தலில் குகேசை மடக்கினார். ஏற்கனவே 5-வது ரவுண்டில் குகேசிடம் தோற்றிருந்த பிரக்ஞானந்தா அதற்கு பதிலடி கொடுத்து விட்டார். சரியான நேரத்தில் எழுச்சி பெற்ற பிரக்ஞானந்தா கடைசி 3 ஆட்டங்களில் கிளா சிக்கல் வடிவிலேயே வெற்றி பெற்று முழுமையாக 3 புள்ளிகளை வசப்படுத்தி ஏற்றம் கண்டுள்ளார்.
மற்ற இரு ஆட்டங்களும் கிளாசிக்கலில் டிரா ஆனதால் ஆர்மகேட்டன் முறையில் முடிவு அறியப்பட்டது. இதன்படி அமெரிக்காவின் வெஸ்லி சோ, நடப்பு சாம்பியன் மாக்னஸ் கார்ல்செனையும் (நார்வே), பிரான்சின் அலிரெஜா பிரோஸ்ஜா, ஜெர்மனியின் வின்சென்ட் கீமரையும் வென்றனர்.
9-வது சுற்று முடிவில் வெஸ்லி சோ 15½ புள்ளிகளுடன் முதலிடத்திலும், பிரக்ஞானந்தா 15 புள்ளியுடன் 2-வது இடத்திலும், அலிரெஜா 14½ புள்ளி களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். 10-வது மற்றும் கடைசி ரவுண்ட் முடிவில் இவர்களில் பட்டம் வெல்லப்போவது யார் என்பது தெரிய வரும். கடைசி ரவுண்டில் பிரக்ஞானந்தா, ஜெர்மனி வீரர் வின்சென்ட் கீமருடன் மோதுகிறார். வாகை சூடுவதற்கு கடைசி சுற்றில் பிரக்ஞானந்தா கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். அதே சமயம் 'நம்பர் ஒன்' வீரரான உள் ளூர் நாயகன் கார்ல்சென் (10 புள்ளி) பட்டத்தை தக்க வைத்துக் கொள் ளும் வாய்ப்பை இழந்தார்.
பெண்கள் பிரிவு
பெண்கள் பிரிவில் நடந்த 9-வது சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனை பிபி சரா அசபயேவா, நடப்பு சாம்பியனான அன்னா முசிசுக்குடன் (உக் ரைன்) மோதினார். 22-வது காய் நகர்த்தலில் ஆட்டம் டிராவில் முடிந்தது. இதையடுத்து கடைபிடிக்கப்பட்ட ஆர்மகேட்டன் முறையில் முசிசுக் வெற்றி பெற்று 1½ புள்ளிகளை பெற்றார். தோல்வி அடைந்த அசபயேவா வுககு ஒரு புள்ளி கிடைத்தது. அதுவே அவர் பட்டத்தை உறுதி செய்வ தற்கும் போதுமானதாக இருந்தது. 9-வது சுற்று நிறைவில் அசபயேவா 16½ புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். 2-வது இடத்தில் உள்ள சீனாவின் ஜூ ஜினெர் (13 புள்ளி) கடைசி ரவுண்டில் வெற்றி பெற்றாலும் அவரை முந்த முடியாது. மற்ற ஆட்டங்களில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக், கோனெரு ஹம்பி இருவரும் தோல்வியை தழுவினர்.