ஐச்சி-நகோயா,
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், பெண்களுக்கான டி12 தடகளப் பிரிவில் இந்திய வீராங்கனைகள் சிம்ரன் சர்மா தங்கப் பதக்கத்தையும், தேஜல்பென் டாமோர் வெண்கலப் பதக்கத்தையும் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
பெண்களுக்கான டி12 பிரிவு ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் சிம்ரன் சர்மா 24.80 விநாடிகளில் இலக்கைக் கடந்து முதலிடம் பிடித்தார். இதன் மூலம் அவர் தங்கப் பதக்கத்தை தட்டி சென்றார்.
ஈரான் வீராங்கனை ஹஜ்ஜார் சபார்சாதே 25.02 விநாடிகளில் பந்தயத்தை நிறைவு செய்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
இதே போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனையான தேஜல்பென் டாமோர், 25.23 விநாடிகளில் இலக்கைக் கடந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
இந்த இரண்டு பதக்கங்களின் மூலம் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் ஒட்டுமொத்தப் பதக்க எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. இதில் 7 தங்கம், 10 வெள்ளி, 13 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும்.