பிற விளையாட்டு

45 நாடுகள் பங்கேற்கும் பாரா ஆசிய விளையாட்டு போட்டி: ஜப்பானில் இன்று தொடக்கம்

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து உள்பட 45 நாடுகளை சேர்ந்த 3,000 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

நகோயா,

இந்தியா உள்பட 45 நாடுகள் பங்கேற்கும் பாரா ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானில் இன்று தொடங்குகிறது.

18 விளையாட்டுகள்

மாற்றுத் திறனாளிகளுக்கான 5-வது பாரா ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி வருகிற 24-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டி, அண்மையில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டி அரங்கேறிய ஸ்டேடியங்களிலேயே நடக்கிறது.

இதில் தடகளம், வில்வித்தை, பேட்மிண்டன், கால்பந்து, துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ், கைப்பந்து, ஜூடோ உள்ளிட்ட 18 விளையாட்டுகளில் மொத்தம் 489 பந்தயங்கள் நடத்தப்படுகிறது.

இந்த போட்டியில் சீனா, ஈரான், ஜப்பான், தென்கொரியா, இந்தோனேசியா, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து உள்பட 45 நாடுகளை சேர்ந்த 3,000 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

168 வீரர்-வீராங்கனைகள்

இந்தியா சார்பில் பயிற்சியாளர்கள், உதவி பயிற்சியாளர்கள், அதிகாரிகள் உள்பட 281 பேர் கொண்ட அணியினர் கலந்து கொள்கிறார்கள். இதில் 112 வீரர்கள், 56 வீராங்கனைகள் அடங்குவர். இந்திய அணி 11 விளையாட்டுகளில் களம் காணுகிறது. இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த சோலைராஜ் தர்மராஜ் (தடகளம்). மனிஷா, நித்யஸ்ரீ, துளசிமதி, சந்தியா, நவீன், ருத்திக் ரகுபதி, சிவராஜன் சோலைமலை, சுதர்சன், ஹாரிஸ் மைதிலி ஸ்ரீகுமார் (9 பேரும் பேட்மிண்டன்), பேபி சஹானா ரவி, ஜெகன் டோரப் மதன் (டேபிள் டென்னிஸ்), கஸ்தூரி (வலுதூக்குதல்) என 13 பேர் அங்கம் வகிக்கின்றனர்.

பாரா ஒலிம்பிக் சாம்பியனும், உலக சாதனையாளருமான சுமித் அன்டில் (ஈட்டி எறிதல்), நிஷாத் குமார் (உயரம் தாண்டுதல்), ஷீத்தல் தேவி (வில்வித்தை), பிரமோத் பகத், சுஹாஸ், நிதிஷ் குமார் (மூவரும் பேட் மிண்டன்), அவெனி லெகரா (துப்பாக்கி சுடுதல்) பவினா பட்டேல் (டேபிள் டென்னிஸ்) உள்ளிட்ட முன்னணி இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கம் வென்று ஜொலிப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

தொடக்க விழா

போட்டியின் தொடக்க விழா நகோயாவில் உள்ள மிசுஹோ ஸ்டேடியத்தில் இன்று (இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணி) பிரமாண்டமாக நடக்கிறது. தொடக்க விழாவையொட்டி கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அத்துடன் வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு நடக்கிறது. பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற பேட்மிண்டன் விரர் பிரமோத் பகத், பாரா ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற பார்வை குறைபாடு கொண்ட ஓட்டப்பந்தய வீராங்கனை சிம்ரன் ஷர்மா ஆகியோர் இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்கின்றனர்.

இந்தியா வெற்றி

அதிகாரபூர்வமாக போட்டி தொடங்கும் முன்பாகவே பேட்மிண்டன், கால்பந்து, டேபிள் டென்னிஸ், வீல்சேர் கூடைப்பந்து போட்டிகள் ஆரம்பமாகி நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் (சி) டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவரான இந்திய வீரர் கிருஷ்ணா நாகர் (எஸ்.எச்.6 கிளாஸ்) தனது 2-வது ஆட்டத்தில் 21-13, 21-15 என்ற நேர்செட்டில் இந்தோனேசியாவின் சுப்ஹானை தோற்கடித்து தொடர்ச்சியாக 2-வது வெற்றியை பெற்றார். அவர் இன்னும் ஒரு லீக் ஆட்டம் மிஞ்சி இருக்கும் நிலையில் கால்இறுதியை உறுதி செய்தார்.

மற்ற ஆட்டங்களில் பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர்களான நிதீஷ் குமார், பிரமோத் பகத் மற்றும் உமேஷ் விக்ரம்குமார், நவீன் சிவகுமார், ருத்திக் ரகுபதி. சிவராஜன் சோலைமலை ஆகியோரும் வெற்றி கண்டனர்.

பேட்மிண்டனில் இந்தியாவுக்கு பதக்கம்

இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த நித்யஸ்ரீ, துளசி மதி, மனிஷா ஆகியோர் வெற்றி பெற்றனர். இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மானசி ஜோஷி-துளசிமதி ஜோடி (ஏ பிரிவு) 21-10, 21-17 என்ற நேர் செட்டில் சீனாவின் யுமேய் லியூ-டோங்டாங் லீ இணையை வீழ்த்தி தொடர்ந்து 2 வெற்றியை ருசித்ததுடன் ஒரு ஆட்டம் எஞ்சி இருக்கும் நிலையில் அரைஇறுதிக்கு முன்னேறியது. அத்துடன் பதக்கத்தையும் உறுதிப்படுத்தியது.

டேபிள் டென்னிசில் பெண்களுக்கான ஒற்றையர் 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை பவினா பட்டேல் (கிளாஸ் 4-5) 11-6, 11-7, 11-4 என்ற நேர் செட்டில் ஜோர்டானின் பாடெனை தோற்கடித்து தொடர்ச்சியாக 2-வது வெற்றியை தனதாக்கினார்.

SCROLL FOR NEXT