பெங்களூரு,
12 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. போட்டியின் 2-வது நாளான நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி 34-27 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை வீழ்த்தியது. குஜராத் அணியில் அதிகபட்சமாக ராகேஷ் நார்வல், கிரிஷ் மாருதி தலா 7 புள்ளிகள் சேகரித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி 41-30 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டனை தோற்கடித்தது. டெல்லி அணியில் ரைடு செல்வதில் வல்லவரான நட்சத்திர வீரர் நவீன்குமார் 16 புள்ளிகள் திரட்டி வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
இன்னொரு ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ் அணி 42-39 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சை சாய்த்து திரில் வெற்றியை சுவைத்தது. இன்றைய லீக் ஆட்டங்களில் மும்பை-தபாங் டெல்லி (இரவு 7.30 மணி), தமிழ் தலைவாஸ்-பெங்களூரு புல்ஸ் (இரவு 8.30 மணி), பெங்கால் வாரியர்ஸ்- குஜராத் ஜெயன்ட்ஸ் (இரவு 9.30 மணி) அணிகள் மோதுகின்றன.