பெங்களூரு,
8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
முதல் நாளான நேற்றிரவு நடந்த தொடக்க ஆட்டத்தில் மும்பை அணி (யு மும்பா) 46-30 புள்ளி கணக்கில் பெங்களூரு புல்சை வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து அரங்கேறிய 2-வது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, தெலுங்கு டைட்டன்சை எதிர்கொண்டது. முதலில் புள்ளி கணக்கை உற்சாகமாக தொடங்கிய தலைவாஸ் அணியினர் அடுத்த சில நிமிடங்களில் தடுமாறினர். இதனால் தெலுங்கு டைட்டன்ஸ் மளமளவென புள்ளிகளை குவித்தது. ஒரு கட்டத்தில் 17-10 என்ற கணக்கில் டைட்டன்ஸ் முன்னிலை கண்டது. அதன் பிறகு எழுச்சி பெற்ற தலைவாஸ் அணியில் மஞ்சித் ஒரே ரைடில் 3 பேரை அவுட் செய்து அசத்தினார். அதன் தொடர்ச்சியாக தெலுங்கு அணியை ஆல்-அவுட் செய்து 20-20 என்று சமனுக்கு கொண்டு வந்தனர். முதல் பாதியில் தலைவாஸ் அணி 23-21 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்தது.
பிற்பாதியில் தொடக்கத்தில் தலைவாஸ் அணியின் கையே ஓங்கி இருந்தது. ஆனால் கடைசி நிமிடங்களில் டைட்டன்ஸ் அணியினர் தொடர்ச்சியாக 8 புள்ளிகளை திரட்டி சரிவில் இருந்து மீண்டதுடன், பரபரப்பான இந்த ஆட்டத்தை 40-40 என்ற புள்ளி கணக்கில் டையில் (சமன்) முடித்தனர். தலைவாஸ் அணியில் அதிகபட்சமாக மஞ்சித் 12 புள்ளிகள் எடுத்தார்.
இன்றைய ஆட்டங்களில் குஜராத் ஜெயின்ட்ஸ்- ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (இரவு 7.30 மணி), தபாங் டெல்லி- புனேரி பால்டன் (இரவு 8.30 மணி), அரியானா ஸ்டீலர்ஸ்-பாட்னா பைரட்ஸ் (இரவு 9.30 மணி) அணிகள் மோதுகின்றன.