தோஹா,
உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில், ஆண்களுக்கான 50 மீட்டர் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்தியா தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது.
ஐஎஸ்எஸ்எப் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடர் கத்தாரின் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இதில், ஆண்களுக்கான 50 மீட்டர் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்தியா தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது.
ரவீந்தர் சிங், சௌரப் சவுத்ரி, அமன்பிரீத் சிங் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, மொத்தம் 1,659 புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்தது.
இந்திய அணியில் ரவீந்தர் சிங் 559 புள்ளிகளும், சௌரப் சவுத்ரி 551 புள்ளிகளும், அமன்பிரீத் சிங் 549 புள்ளிகளும் எடுத்தனர்.
சீனா 1,648 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தையும், தென்கொரியா 1,643 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றன.
ஆண்களுக்கான 50 மீட்டர் பிஸ்டல் தனிநபர் பிரிவிலும் இந்தியாவின் ரவீந்தர் சிங் சிறப்பாக செயல்பட்டு வெள்ளி பதக்கம் வென்றார். அவர் 559 புள்ளிகள் எடுத்தார்.
561 புள்ளிகளுடன் ரஷியாவின் அன்டன் அரிஸ்டார்கோவ் தங்கப் பதக்கத்தையும், 558 புள்ளிகளுடன் ருமேனியாவின் லூகா ஜோல்டியா வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.