ஹாங்காங்,
ஹாங்காங் ஓபன் சூப்பர் 500 பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.
இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்திய ஜோடி, மலேசியாவின் மேன் வெய் சோங் – டீ காய் வுன் ஜோடியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மலேசிய ஜோடி 21-18, 21-19 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே இரு ஜோடிகளும் புள்ளிகளைக் கைப்பற்ற கடுமையாகப் போராடின. இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி மலேசிய ஜோடிக்கு நெருக்கடி கொடுத்தனர்.
ஒரு கட்டத்தில் 17-17 என சமநிலை ஏற்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் சிறப்பாக செயல்பட்ட மலேசிய வீரர்கள் முதல் செட்டை 21-18 என்ற கணக்கில் கைப்பற்றினர்.
இரண்டாவது செட்டின் தொடக்கத்தில் சாத்விக் - சிராக் ஜோடி 7-3 என முன்னிலை பெற்று நம்பிக்கை அளித்தது. இருப்பினும், மலேசிய ஜோடி அடுத்தடுத்து புள்ளிகளைக் கைப்பற்றி ஆட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
இந்திய வீரர்கள் இறுதிக்கட்டத்தில் போராடி 19-19 என சமநிலைக்குக் கொண்டு வந்தனர். ஆனால் அடுத்தடுத்த புள்ளிகளைப் பெற்ற மலேசிய ஜோடி 21-19 என இரண்டாவது செட்டையும் கைப்பற்றியது.
இதன் மூலம் 21-18, 21-19 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற மேன் வெய் சோங் - டீ காய் வுன் ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்தத் தோல்வியின் மூலம் இந்தியாவின் நட்சத்திர ஜோடியான சாத்விக் - சிராக் ஹாங்காங் ஓபன் தொடரிலிருந்து வெளியேறியது. சுமார் 41 நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய ஜோடி கடைசி வரை போராடியபோதிலும் வெற்றியைப் பெற முடியவில்லை.
இதனால் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பட்டம் வெல்லும் வாய்ப்பு முடிவுக்கு வந்துள்ளது.