லாஸ் வேகாஸ்,
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்ற நேச்சுரல் ஒலிம்பியா 2026 பாடிபில்டிங் போட்டியில் இந்திய வீரர் ஷோதன் ராய் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
பெங்களூருவைச் சேர்ந்த ஷோதன் ராய், இதுவரை 39 சர்வதேசப் போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். உலகக் கோப்பை, யுனிவர்ஸ், இன்டர்நேஷனல் பசிபிக் ரிம், நேச்சுரல் ஒலிம்பியா மற்றும் ஆசிய பசிபிக் சாம்பியன்ஷிப் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
நேச்சுரல் ஒலிம்பியாவுக்கு முன்பாக, இந்த மாதத் தொடக்கத்தில் நடைபெற்ற ஐரன் மேன் வேர்ல்ட் நேச்சுரல் பாடிபில்டிங் உலகக் கோப்பையில் ஷோதன் ராய் 2 தங்கப் பதக்கங்களை வென்றார்.
ஜூனியர் மாஸ்டர்ஸ் மற்றும் மாஸ்டர்ஸ் ஆகிய இரு பிரிவுகளிலும் முதலிடம் பிடித்து அசத்தினார். இந்த வெற்றி நேச்சுரல் ஒலிம்பியாவுக்கான அவரது தயாரிப்புக்கு கூடுதல் நம்பிக்கையை அளித்தது.
இதற்கு முன்பு நேச்சுரல் ஒலிம்பியா போட்டியில் 2 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 8 பதக்கங்களை ஷோதன் ராய் வென்றிருந்தார். தற்போது மேலும் ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்றதன் மூலம் அந்தப் போட்டியில் தனது மொத்தப் பதக்க எண்ணிக்கையை 9-ஆக உயர்த்தியுள்ளார்.