பிலடெல்பியா,
அமெரிக்க ஓபன் ஸ்குவாஷ் தொடரில் மலேசியாவின் நட்சத்திர வீராங்கனை எஸ். சிவசங்கரி, தனது முதல் சுற்றுப் போட்டியில் சக நாட்டு வீராங்கனையான ஐபா அஸ்மானை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
அமெரிக்க ஓபன் ஸ்குவாஷ் தொடரில் 5-வது நிலை வீராங்கனையாகக் களமிறங்கிய சிவசங்கரி, முதல் சுற்றில் ஐபா அஸ்மானை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அவர், 22 நிமிடங்களிலேயே 11-2, 11-4, 11-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இதன் மூலம் போட்டியின் 2-வது சுற்றுக்கு அவர் முன்னேறியுள்ளார்.
கடந்த மாதம் நடைபெற்ற சிலிகான் வேலி ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சிவசங்கரி, அடுத்த சுற்றில் எகிப்தின் கென்சி ஐமன் அல்லது அமெரிக்காவின் அலெக்ஸ் ஜாபே ஆகியோரில் ஒருவரை எதிர்கொள்ள உள்ளார்.