கோப்புப்படம் 
பிற விளையாட்டு

சூப்பர் ரேபிட், பிளிட்ஸ் செஸ்: நீமன் சாம்பியன், குகேஷ் 6-வது இடம்

ரேபிட், பிளிட்ஸ் சுற்றுகள் முடிவில் அமெரிக்க வீரர் ஹான்ஸ் மேக் நீமன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

வார்சா,

கிராண்ட் செஸ் டூரின் ஒரு பகுதியான சூப்பர் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் போட்டி போலந்தின் வார்சாவில் நடந்து வந்தது. இதில் முதலில் ரேபிட் பிரிவில் 9 சுற்று நடந்தது. இதைத் தொடர்ந்து பிளிட்ஸ் பிரிவில் 18 சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.

இதன் கடைசி சுற்றில் அமெரிக்க வீரர் ஹான்ஸ் மோக் நீமன், போலந்தின் ரடோஸ்லாவ் வோஜ்டாசெக்கை வீழ்த்தினார். ரேபிட், பிளிட்ஸ் சுற்றுகள் முடிவில் அமெரிக்க வீரர் ஹான்ஸ் மேக் நீமன் 22.5 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அவர் ரேபிட் பிரிவில் 13 புள்ளிகளுடன் முதலிடமும் பிளிட்ஸ் பிரிவில் 9.5 புள்ளிகளுடன் 3-வது இடமும் பிடித்தார். அவருக்கு பரிசுக் கோப்பையுடன் ரூ.47 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.

அமெரிக்காவின் பாபியானோ கருனா 22 புள்ளிகளுடன் (ரேபிட்-9, பிளிட்ஸ்-13) 2-வது இடமும், வெஸ்லி சோ 21 புள்ளிகளுடன் (ரேபிட்-12, பிளிட்ஸ்-9) 3-வது இடமும் பெற்றனர். உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ் 17 புள்ளிகளுடன் (ரேபிட்-9, பிளிட்ஸ்-8) 6-வது இடம் பெற்றார்.