லக்னோ,
லக்னோவில் நடைபெற்று வரும் சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்திய வீராங்கனைகள் உன்னதி ஹூடா, தன்வி சர்மா ஆகியோர் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினர்.
இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் உன்னதி ஹூடா, தனது சக வீராங்கனையான அன்மோல் கார்பை எதிர்கொண்டார். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவிய இந்த ஆட்டத்தில் உன்னதி ஹூடா 21-19, 15-21, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் தன்வி சர்மா, இந்தோனேசிய வீராங்கனை பிரதிவியை எதிர்கொண்டார். இதில் சிறப்பாக விளையாடிய தன்வி சர்மா 21-19, 18-21, 21-14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.
இதற்கிடையே, இந்தியாவின் மற்றொரு வீராங்கனையான தஸ்னிம் மிர் காலிறுதியில் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறினார்.