லக்னோ,
சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி லக்னோவில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் துஷார் சுவீர் 21-11, 21-17 என்ற நேர்செட்டில் ஜஸ்டின் ஹோக்கை (மலேசியா) வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் ஷஷ்வாத் தலால் 21-14. 16-21, 21-7 என்ற செட் கணக்கில் மார்க் ஷெல்லியை (அமெரிக்கா) சாய்த்தார். மற்ற இந்திய வீரர்கள் கிரண் ஜார்ஜ் 4-21, 18-21 என்ற நேர்செட்டில் இந்தோனேசியாவின் ரிசி டுடா ரிச்சர்டோவிடமும், சங்கர் முத்துசாமி 17-21, 12-21 என்ற நேர்செட்டில் மலேசியாவின் லீ ஜீ ஜியா விடமும், பிரனாய் 19-21, 17-21 என்ற நேர்செட்டில் சீன தைபேயின் ஹி யிங் வூவிடமும் தோல்வி அடைந்தனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை தன்யா ஹேமந்த் 21-14. 18-21, 21-16 என்ற செட் கணக்கில் தேவிகா ஷிகாக்கை விரட்டினார். இன்னொரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை உன்னதி ஹூடா 21-15, 21-19 என்ற நேர்செட்டில் யேவ்ஷெனியா கேன்டமிரை (உக்ரைன்) தோற்கடித்து 2-வது சுற்றை எட்டினார். இந்திய வீராங்கனைகள் தஸ்னிம் மிர், தன்வி, இஷாராணி பருவா ஆகியோரும் வெற்றி பெற்றனர். அதே சமயம் ஆகர்ஷி காஷ்யப். மான்சி சிங் முதல் சுற்றுடன் நடையை கட்டினர்.
பெண்கள் இரட்டையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பிய னான இந்தியாவின் திரிஷா ஜாலி- காயத்ரி ஜோடி 21-8, 21-7 என்ற கணக்கில் சக நாட்டவரான ராஷ்மி- அம்ருதா இணையை வீழ்த்தி போட்டியை வெற்றியுடன் தொடங்கியது.