பெங்களூரு,
2014-ம் ஆண்டு முதல் புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. கபடி ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் இந்த திருவிழாவை காணும் பார்வையாளர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்தபடி இருக்கிறது. கடைசியாக 2019-ம் ஆண்டு நடந்த போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு இந்த போட்டி நடைபெறவில்லை.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் உள்ள ஷெராட்டன் கிராண்ட் ஒயிட் பீல்டு ஓட்டல் வளாகத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.
போட்டியில் நடப்பு சாம்பியன் பெங்கால் வாரியர்ஸ், 3 முறை சாம்பியனான பாட்னா பைரட்ஸ், முன்னாள் சாம்பியன்கள் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், மும்பை, பெங்களூரு புல்ஸ் மற்றும் தபாங் டெல்லி, புனேரி பால்டன், தெலுங்கு டைட்டன்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், உ.பி.யோத்தா, தமிழ் தலைவாஸ், அரியானா ஸ்டீலர்ஸ் ஆகிய 12 அணிகள் கலந்து கொள்கின்றன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். இதில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைக்கும். எஞ்சிய 4 அணிகள் எலிமினேட்டர் (வெளியேற்றுதல்) ஆட்டத்தில் மோதும். இதில் வெற்றி பெறும் 2 அணிகள் அரைஇறுதி வாய்ப்பை பெறும்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது. மருத்துவ உயிர் பாதுகாப்பு நடைமுறையை (பயோ பபுள்) பின்பற்றி நடைபெறும் இந்த போட்டிக்காக 12 அணி வீரர்களும் பெங்களூருவில் உள்ள ஓட்டலில் தனித்தனி அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் ஓட்டலை விட்டு வெளியில் செல்ல முடியாது. அத்துடன் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும், முககவசம் அணியவும் உத்தரவிடப்பட்டுள்ளது. போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், அதிகாரிகள், போட்டி நடைபெறும் ஓட்டலில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தினசரி கொரோனா பரிசோதனை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் ஓட்டலுக்குள் வெளியாட்கள் நுழையவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த முறை எல்லா அணிகளும் சில பழைய வீரர்களை கழற்றி விட்டு இருப்பதுடன், கடந்த ஆகஸ்டு மாதம் நடந்த ஏலத்தில் தங்களுக்கு தேவையான புதிய வீரர்களை எடுத்து அணியின் வலிமையை அதிகரித்து இருப்பதுடன், தீவிர பயிற்சியின் மூலம் தங்களது திறமையை பட்டை தீட்டி இருக்கின்றன.
தமிழ் தலைவாஸ் அணி அஜய் தாக்குர், ராகுல் சவுத்ரி, மன்ஜீத் ஷில்லார் உள்ளிட்ட முன்னணி வீரர்களை கழற்றிவிட்டு தங்கள் படையில் இளம் வீரர்களை அதிகம் இணைத்து இருக்கிறது. புதிய கேப்டனாக சுர்ஜீத் சிங்கும், துணை கேப்டனாக பிரபஞ்சனும் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த 3 முறையும் லீக் சுற்றை தாண்டாத தமிழ் தலைவாஸ் இந்த முறை எழுச்சி பெறுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
இந்த சீசன் குறித்து தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளர் உதயகுமார் கூறுகையில், மிகவும் யோசித்து வலிமையும், உடல் தகுதியும் மிக்க இளம் வீரர்களை நாங்கள் தேர்வு செய்துள்ளோம். அதிக முயற்சி எடுத்து வீரர்களுக்கு பயிற்சி அளித்து இருக்கிறோம். புதிய திட்டங்களையும் வகுத்து இருக்கிறோம். இந்த அணி நிச்சயம் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்காது என்றார்.
தொடக்க நாளான இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ்-மும்பை அணிகள் மோதுகின்றன. இதைத் தொடர்ந்து நடைபெறும் ஆட்டங்களில் தெலுங்கு டைட்டன்ஸ்-தமிழ் தலைவாஸ் (இரவு 8.30 மணி), பெங்கால் வாரியர்ஸ்-உ.பி.யோத்தா (இரவு 9.30 மணி) அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.