ஹோர்சென்ஸ்,
ஆண்களுக்கான தாமஸ் கோப்பை மற்றும் பெண்களுக்கான உபேர் கோப்பை பேட்மிண்டன் போட்டி டென்மார்க்கில் உள்ள ஹோர்சென்ஸ் நகரில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதில் ஆண்களுக்கான 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் கனடாவை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கனடாவை தோற்கடித்து போட்டியை வெற்றியுடன் தொடங்கியது.
ஒற்றையர் முதலாவது ஆட்டத் தில் இந்திய வீரர் லக்ஷயா சென் 21-18, 19-21, 10-21 என்ற செட் கணக் கில் விக்டர் லாயிடம் (கனடா) தோற்றார். மற்ற ஒற்றையர் ஆட்டங்களில் இந்திய வீரர்கள் ஆயுஷ் ஷெட்டி, ஸ்ரீகாந்த் ஆகியோரும், இரட்டையர் ஆட்டங்களில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ்-ரங்கி ரெட்டி, ஹரிகரன் அம்சகருணன்-எம்.ஆர்.அர்ஜூன் இணையினர் வெற்றி பெற்றனர். இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் நாளை மறுநாள் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.
இதேபிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சீனா 5-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வென்றது.
பெண்களுக்கான 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 2-3 என்ற கணக்கில் டென்மார்க்கிடம் போராடி தோற்றது. இந்திய அணியில் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து வெற்றி பெற்றார்.
இரட்டையர் பிரிவில் தனிஷா கிரஸ்டோ-பி.வி.சிந்து ஜோடியை, எதிர்த்து ஆடிய இணை காயத்தால் விலகியதால் வெற்றி கிடைத்தது. ஆனால் ஒற்றையரில் இந்திய வீராங்கனைகள் உன்னதி ஹூடா, தன்வி ஷர்மாவும், இரட்டையரில் இந்தியாவின் ஸ்ருதி மிஸ்ரா- பிரியா இணையும் தோல்வியை தழுவினர்.