பிற விளையாட்டு

அபுதாபி ஓட்டலில் எம்.எம்.ஏ. வீரர்கள் மோதல்... 10 பேரை கைது செய்த போலீஸ்

முன்னதாக இரு தரப்பினருக்கும் இடையே இருந்த பிரச்சினையே இந்த மோதலுக்குக் காரணம் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

அபுதாபி,

அபுதாபியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் முன்னாள் யு.எப்.சி. சாம்பியன் மெராப் ட்வாலிஷ்விலி மற்றும் எம்.எம்.ஏ. வீரர் உஸ்மான் நூர்மகோமெடோவ் தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக 10 பேரை அபுதாபி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களில் 8 பேர் மோதலில் ஈடுபட்டவர்கள், மற்ற 2 பேர் சம்பவத்தை வீடியோ எடுத்தவர்கள்.

நேர்காணலின்போது ஏற்பட்ட மோதல்

ஜார்ஜியா நாட்டை சேர்ந்த மெராப், அபுதாபியில் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள 'ரியல் அமெரிக்கன் ப்ரீஸ்டைல்' (RAF) மல்யுத்த நிகழ்ச்சியில் பங்கேற்க அங்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், புதன்கிழமை ஓட்டல் வரவேற்புப் பகுதியில் அவர் நேர்காணல் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது ரஷ்யாவை சேர்ந்த உஸ்மான் நூர்மகோமெடோவ் மற்றும் அவரது குழுவினர் பின்னால் இருந்து வந்து அவரை தாக்கினர்.

இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “நான் நேர்காணல் கொடுத்துக் கொண்டிருந்தபோது உஸ்மானும் அவரது நண்பர்களும் பின்னால் இருந்து வந்து என்னையும் என்னுடன் இருந்த இளைஞரையும் தாக்கினர். பாதுகாவலர்கள் என்னைப் பிடித்து வைத்திருந்தபோதும், கீழே விழுந்த எங்களை அவர்கள் தொடர்ந்து தாக்கினர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த மோதல் தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. அதில், மெராப் நேர்காணல் கொடுத்துக் கொண்டிருக்கும்போது பின்னால் இருந்து வரும் உஸ்மான் அவரை முகத்தில் அறைவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

10 பேர் கைது

இந்தச் சம்பவம் தொடர்பாக 10 பேரை அபுதாபி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக அபுதாபி காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், ஓட்டல் நுழைவுப் பகுதியில் ஏற்பட்ட மோதலில் ஈடுபட்ட 8 பேர், அந்தச் சம்பவத்தை வீடியோ எடுத்த 2 பேஎ என மோத்தம் 10 பேரை கைது செய்து, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக இரு தரப்பினருக்கும் இடையே இருந்த பிரச்சினையே இந்த மோதலுக்குக் காரணம் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT