பிற விளையாட்டு

வைஷாலியிடம் தோற்று அரையிறுதி வாய்ப்பை இழந்த அர்ஜுன்... உலக செஸ் தொடரில் இந்தியாவுக்கு ஏமாற்றம்

அர்ஜுன் எரிகைசி, சாம்பியன் பட்டத்துக்கான போட்டியில் இருந்து வெளியேறினார்.

புடாபெஸ்ட்,

ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடைபெறும் டோட்டல் செஸ் உலக சாம்பியன்ஷிப் சுற்றுப் போட்டியின் பட்டத்துக்கான அரையிறுதிப் பிரிவுக்கு இந்திய வீரர்கள் யாரும் தகுதி பெறவில்லை. கடைசி நாள் ஆட்டத்தில் சக இந்திய வீராங்கனை ஆர். வைஷாலியிடம் தோல்வியடைந்த அர்ஜுன் எரிகைசி, சாம்பியன் பட்டத்துக்கான போட்டியில் இருந்து வெளியேறினார்.

வைஷாலியிடம் தோல்வி

குரூப் டி பிரிவில் கடைசி நாள் ஆட்டத்துக்கு முன்பு அர்ஜுன் எரிகைசி, பிரான்சின் மேக்சிம் வாச்சியர்-லாக்ரேவ், அமெரிக்காவின் ஹான்ஸ் நீமன் ஆகியோர் தலா 13 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர்.

நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் வெள்ளைக் காய்களுடன் விளையாடிய அர்ஜுன், வைஷாலியை வீழ்த்தினார். இதனால் 16 புள்ளிகளுடன் முன்னிலை பெற்றார். அதே நேரத்தில் வாச்சியர்-லாக்ரேவ் டிரா செய்தார். நீமன் தோல்வியடைந்தார்.

ஆனால், அடுத்த ஆட்டத்தில் கருப்புக் காய்களுடன் விளையாடிய அர்ஜுன், வைஷாலியிடம் 61 நகர்த்தல்களில் தோல்வியடைந்தார். இதனால் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்

4 வீரர்கள் அரையிறுதிக்கு தகுதி

குரூப் டி பிரிவில் வாச்சியர்-லாக்ரேவ் 17 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். நீமனும் அர்ஜுனும் தலா 16 புள்ளிகள் பெற்றனர். இருப்பினும், தொடக்க பிளிட்ஸ் சுற்றில் பெற்ற தரவரிசை அடிப்படையிலான டைபிரேக்கில் நீமன் முன்னிலை பெற்று 2-வது இடத்தைப் பிடித்தார். அர்ஜுன் 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டார்.

மற்ற பிரிவுகளில் பிரான்சின் அலிரேசா பிரோஜா, அமெரிக்காவின் பேபியானோ கருவானா, நெதர்லாந்தின் அனிஷ் கிரி ஆகியோர் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறினர்.

இதன்படி, அரையிறுதியில் வாச்சியர்-லாக்ரேவ் - அனிஷ் கிரி, பிரோஜா - கருவானா ஆகியோர் மோதுகின்றனர். இந்த ஆட்டங்கள் நாளை தொடங்குகின்றன.

பிரக்ஞானந்தாவுக்கும் ஏமாற்றம்

மற்றொரு இந்திய வீரரான ஆர். பிரக்ஞானந்தா, குரூப் பி பிரிவில் கடைசி இடத்தைப் பிடித்தார். வியட்நாமின் லியம் லீக்கு எதிரான இரு ஆட்டங்களையும் டிரா செய்த அவர், மொத்தம் 7 புள்ளிகளுடன் தொடரை நிறைவு செய்தார். 10 ஆட்டங்களில் 7-ல் டிரா செய்த அவர், 3 ஆட்டங்களில் தோல்வியடைந்தார்.

வைஷாலியும் குரூப் டி பிரிவில் 7 புள்ளிகளுடன் கடைசி இடத்தைப் பிடித்தார். இதனால் பிரக்ஞானந்தாவும் வைஷாலியும் 21 முதல் 24-வது இடங்களுக்கான நாக்-அவுட் பிரிவில் விளையாட உள்ளனர். அர்ஜுன் 9 முதல் 12-வது இடங்களுக்கான பிரிவில் களமிறங்குவார்.

கார்ல்சனுக்கும் ஏமாற்றம்

உலகின் நம்பர் 1 வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனும் குரூப் சி பிரிவில் 9 புள்ளிகளுடன் 5-வது இடத்தைப் பிடித்தார். இயான் நெபோம்னியாச்சிக்கு எதிரான இரு ஆட்டங்களையும் டிரா செய்த அவர், இந்தச் சுற்றில் ஒரு வெற்றியைக்கூடப் பெறவில்லை. மொத்தம் 9 ஆட்டங்களை டிரா செய்த கார்ல்சன், ஒரு ஆட்டத்தில் தோல்வியடைந்தார்.

இந்தத் தொடரில் பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்த வீரர்களும் தொடர்ந்து விளையாடுவார்கள். அவர்களின் குழுநிலை இடங்களின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட நாக்-அவுட் சுற்றுகளில் பிளிட்ஸ், ரேபிட் மற்றும் பாஸ்ட் கிளாசிக் ஆட்டங்கள் நடைபெறும். இதன் மூலம் ஒவ்வொரு வீரரின் இறுதி இடமும் தீர்மானிக்கப்படும்.

SCROLL FOR NEXT