உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் மூன்றாவது ஆட்டத்திலும் இந்திய வீரர் குகேஷ், உஸ்பெகிஸ்தான் வீரர் ஜாவோகிர் சிண்டரோவுடன் டிரா செய்தார்.
மூன்றாவது ஆட்டத்தில் சிண்டரோவ் எதிர்பார்த்ததைவிட கடினமான சூழலைச் சந்தித்தார். குகேஷ் எடுத்த சில சிறப்பான நகர்வுகளால், சிண்டரோவ் தனது அடுத்த நகர்வுகளைத் தீர்மானிக்க அதிக நேரம் எடுத்துக்கொண்டார். இதனால் அவருக்கு நேர நெருக்கடியும் ஏற்பட்டது.
ஆனால், குகேஷ் எந்தவித பதற்றமும் இல்லாமல் நிதானமாக விளையாடினார். சிண்டரோவ் பலமுறை முன்னிலை பெற முயன்றபோதும், குகேஷ் அதற்கு இடமளிக்கவில்லை. இருவரும் வெற்றிக்காகப் போராடியபோதும், யாராலும் மற்றவரை வீழ்த்த முடியவில்லை.
ஆட்டத்தின் 40 நகர்வுகள் முடிந்த பிறகுதான் டிரா செய்ய இருவருக்கும் அனுமதி கிடைத்தது. அதன்பிறகும் ஆட்டம் தொடர்ந்தது. கடைசி கட்டத்தில் சிண்டரோவ் மீண்டும் அழுத்தம் கொடுக்க முயன்றார். இருப்பினும், குகேஷ் தனது காய்களைச் சிறப்பாக நகர்த்தி ஆட்டத்தை சமநிலையில் வைத்திருந்தார்.
இறுதியில் 60 நகர்வுகளுக்குப் பிறகு இருவரும் ஆட்டத்தை டிரா செய்வதாக ஒப்புக்கொண்டனர். இன்று (வெள்ளிக்கிழமை) போட்டியில் ஓய்வு நாளாகும். அடுத்த ஆட்டத்தில் குகேஷ் வெள்ளைக் காய்களுடன் விளையாட உள்ளார். தற்போது இருவரும் தலா 1.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருப்பதால் அடுத்த ஆட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.