புதுடெல்லி,
உலக ஜூனியர் யு-20 செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் இரட்டை தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். வெனிசுலாவின் கராகஸ் நகரில் நடைபெற்ற இப்போட்டியின் ஓபன் பிரிவில் ஈதன் வாஸும், பெண்கள் பிரிவில் சவிதா ஸ்ரீ பாஸ்கரும் சாம்பியன் பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
ஓபன் பிரிவில் 11 சுற்றுகளின் முடிவில் 9 புள்ளிகளைப் பெற்ற இந்தியாவின் 15 வயது கிராண்ட்மாஸ்டர் ஈதன் வாஸ் முதலிடம் பிடித்தார். இதன் மூலம் உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் வரலாற்றில் மிக இளம் வயதில் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
இதற்கு முன்பு 1988-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் நடைபெற்ற போட்டியில் பிரான்ஸ் வீரர் ஜோயல் லாட்டியர், 15 வயது 5 மாதங்களில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். தற்போது 15 வயது 2 மாதங்களிலேயே பட்டம் வென்ற ஈதன் வாஸ், 38 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார்.
பெண்கள் பிரிவில் இந்தியாவின் முதல்நிலை வீராங்கனையான சர்வதேச மாஸ்டர் சவிதா ஸ்ரீ பாஸ்கர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 11 சுற்றுகளின் முடிவில் 9.5 புள்ளிகளைப் பெற்ற அவர், ஒரு ஆட்டத்தில்கூட தோல்வியடையாமல் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
முதல் 7 சுற்றுகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற சவிதா, அடுத்த 3 சுற்றுகளில் டிரா செய்தார். கடைசி சுற்றிலும் வெற்றி பெற்று முதலிடத்தை உறுதி செய்தார்.
இந்தியாவின் மற்றொரு வீராங்கனையான டபிள்யூ.எப்.எம். நிவேதிதா வி.சி. 7.5 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
இதற்கு முன்பு 2008-ம் ஆண்டு உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப்பின் ஓபன் பிரிவில் அபிஜீத் குப்தாவும், பெண்கள் பிரிவில் ஹரிகா துரோணவள்ளியும் பட்டம் வென்றிருந்தனர். தற்போது 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா மீண்டும் இரு பிரிவுகளிலும் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளது.
நவம்பர் 18 முதல் 27-ம் தேதி வரை கராகஸில் நடைபெற்ற இப்போட்டியில், ஓபன் பிரிவில் 26 நாடுகளைச் சேர்ந்த 59 வீரர்களும், பெண்கள் பிரிவில் 23 நாடுகளைச் சேர்ந்த 43 வீராங்கனைகளும் பங்கேற்றனர்.