டாக்கர்,
இளையோர் ஒலிம்பிக் போட்டியில் கடற்கரை மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை தனியா வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
2026 இளையோர் ஒலிம்பிக் போட்டி செனிகல் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் சாலி பீச் வெஸ்ட் மைதானத்தில் நடைபெற்ற மகளிருக்கான 75 கிலோ கடற்கரை மல்யுத்தப் பிரிவில் தங்கப் பதக்கத்திற்கான இறுதிப்போட்டியில் இந்தியாவின் தனியா, சீனாவின் மின் ஜாவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் தொடக்கத்தில் 1-0 என முன்னிலை பெற்ற தானியா, இறுதியில் 1-2 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்தார். இதனால் அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
இந்த வெற்றியின் மூலம் இளையோர் ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது. இதில் 3 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும்.
ஏற்கெனவே ஜூடோவில் குஷ்பூ ராஜாக்பாய் தர்ஜாதா, பேட்மிண்டனில் தன்வி பத்ரி ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளனர். நீச்சலில் தினிதி தேசிங்கு 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ப்ரீஸ்டைல் பிரிவுகளில் 2 வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுள்ளார். ஆடவர் 200 மீட்டர் நீச்சலில் தீர்த்தங்கர் பெகு வெண்கலம் வென்றார். வூஷூ போட்டியில் ராஜ்குமாரி லான்சென்பி சானு மற்றொரு வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுள்ளார்.