தகார்
இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில், இந்திய பேட்மிண்டன் வீராங்கனை தன்வி சர்மா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
செனகல் நாட்டின் தகார் நகரில் இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், இந்தியாவை சேர்ந்த பேட்மிண்டன் வீராங்கனை தன்வி சர்மா அரையிறுதி போட்டிக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளார்.
இதுபற்றி இந்திய பேட்மிண்டன் அமைப்பு வெளியிட்டு உள்ள செய்தியில், இளையோர் ஒலிம்பிக்கில், 2010-ம் ஆண்டில் சிங்கப்பூரில் நடந்த போட்டியில் எச்.எஸ். பிரணாய் வெள்ளி பதக்கம் வென்றார். இதேபோன்று 2018-ம் ஆண்டில் லக்சயா சென் 2-வது இடம் பெற்றார்.
2014-ம் ஆண்டில் ஆதித்ய ஜோஷி ஆண்களுக்கான தனிநபர் அரையிறுதிக்கு முன்னேறியபோதும் பதக்கம் பெறாமல் நாடு திரும்பினார் என தெரிவித்து உள்ளது. இந்த 3 பேர் வரிசையில் 4-வது நபராக தன்வி இணைந்துள்ளார்.
இளையோர் ஒலிம்பிக்கில், பதக்கம் வெல்லும் முதல் இந்திய வீராங்கனையாக ஆகும் வாய்ப்பு தன்விக்கு உள்ளது. அவர் அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்றால், நிச்சயம் ஒரு பதக்கம் கிடைக்கும். தோல்வி ஏற்பட்டாலும், அவருக்கு வெண்கல பதக்கம் கிடைக்க மற்றொரு வாய்ப்பு உள்ளது.
அரையிறுதி போட்டியில் ஜப்பானின் யுஜுனோ வதனாபேவை தன்வி எதிர்கொள்ள உள்ளார். இருவரும் இதற்கு முன், தாய்லாந்தில் நடந்த சர்வதேச ஜூனியர் போட்டியில் 2024-ம் ஆண்டில் விளையாடி உள்ளனர். எனினும், அதில் 14-21, 10-21 என்ற செட் கணக்கில் தன்விக்கு தோல்வியே கிடைத்தது. இதனால், இந்த முறை பதக்கம் வெல்லும் முனைப்புடன் தன்வி விளையாடுவார் என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். நடந்து வரும் இளையோர் ஒலிம்பிக்கில் இதுவரை, ஒரு வெள்ளி மற்றும் 2 வெண்கலம் என மொத்தம் 3 பதக்கங்கள் இந்தியாவுக்கு கிடைத்துள்ளன.