நியூயார்க்,
கிராண்ட் ஸ்லாம் சாம்பியனும், ஒலிம்பிக் வெள்ளிப் பதக்க வெற்றியாளருமான ரஷியாவின் இளம் டென்னிஸ் நட்சத்திரம் மிரா ஆண்ட்ரீவா, தனது வாழ்க்கையிலும் டென்னிஸ் பயணத்திலும் தனக்கு மிகப்பெரிய வழிகாட்டியாகவும், முன்மாதிரியாகவும் இருப்பது தனது அக்கா எரிகா ஆண்ட்ரீவாதான் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மிர்ரா ஆண்ட்ரீவா, தனது அக்கா குறித்து கூறியதாவது:
“நான் இளையவள் என்பதால் எனக்கு பல நன்மைகள் கிடைத்தன. அக்கா ஆரம்பத்தில் நிறைய டென்னிஸ் போட்டிகளில் விளையாடினார். ஆனால், நான் அவ்வளவு போட்டிகளில் விளையாட வேண்டிய அவசியம் இருக்கவில்லை. இதனால் எனக்கு நிறைய நேரம் கிடைத்தது. பள்ளிப் படிப்பிலும் அக்கா எனக்கு நிறைய உதவி செய்தார். பல நல்ல ஆலோசனைகளையும் கொடுத்தார். அவர் எனக்கு மிகப்பெரிய முன்மாதிரி” என்றார்.
மேலும், “நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் போட்டியாக நினைத்துக்கொண்டதில்லை. ‘நீங்கள் இருவரும் சகோதரிகள். எப்போதும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டும்’ என்று எங்கள் பெற்றோர் சிறு வயதிலிருந்தே எங்களுக்குக் கற்றுக்கொடுத்தனர்” என்றார்.
தொடர்ந்து, “நாங்கள் இருவரும் ஒன்றாக அதிகமாக பயிற்சி செய்வதில்லை. பயிற்சியின்போது எனக்கு கோபம் வந்தால், அதைப் பார்த்து அக்கா சோகமடைந்துவிடுவார். அக்கா சோகமாக இருப்பதைப் பார்த்து நானும் சோகமாகிவிடுவேன்” என்று சிரித்தபடி கூறினார்.
மிர்ரா ஆண்ட்ரீவா உலகின் முன்னணி வீராங்கனையாக உருவெடுத்து வரும் நிலையில், அவரது அக்கா எரிகா ஆண்ட்ரீவாவும் டென்னிஸ் உலகில் தனது முத்திரையைப் பதித்து வருகிறார்.
2024-ம் ஆண்டு அக்டோபரில் உலகத் தரவரிசையில் 65-வது இடத்தைப் பிடித்த எரிகா, தனது சிறந்த தரவரிசையை பதிவு செய்தார். 2025 விம்பிள்டன் தொடருக்குப் பிறகு நீண்ட ஓய்வில் இருந்த எரிகா, தற்போது தரவரிசையில் முன்னேறி மீண்டும் டாப்-200 இடங்களுக்குள் நுழையும் நிலையில் உள்ளார்.