காஸ்வே பே,
ஹாங்காங் ஓபன் மகளிர் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தபோதிலும், பிலிப்பைன்ஸ் வீராங்கனை ஈலா தனது டென்னிஸ் வாழ்க்கையில் புதிய மைல்கல்லை எட்டவுள்ளார். இந்தத் தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறியதன் மூலம், உலகத் தரவரிசையில் 15-வது இடத்துக்கு முன்னேறி தனது சிறந்த தரவரிசையைப் பதிவு செய்ய உள்ளார்.
ஹாங்காங்கின் காஸ்வே பே பகுதியில் உள்ள விக்டோரியா பார்க் மைய மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், 21 வயதான ஈலா அமெரிக்காவின் கிளாரி லியூவை எதிர்கொண்டார்.
ஆட்டத்தின் தொடக்கத்தில் இருவரும் சமபலத்துடன் விளையாடினர். முதல் 6 கேம்களின் முடிவில் இருவரும் தலா 3 கேம்களைக் கைப்பற்றி சமநிலையில் இருந்தனர். அதன்பிறகு அதிரடியாக விளையாடிய கிளாரி லியூ, தொடர்ந்து 9 கேம்களைக் கைப்பற்றி 6-3, 6-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இதன் மூலம் கிளாரி லியூ தனது முதல் டபிள்யூ.டி.ஏ. தொடர் ஒற்றையர் பட்டத்தைக் கைப்பற்றினார்.
இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தாலும், ஈலாவுக்கு 163 தரவரிசைப் புள்ளிகள் கிடைத்துள்ளன. இதன் மூலம் தற்போது 17-வது இடத்தில் உள்ள ஈலா, புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்போது 2 இடங்கள் முன்னேறி 15-வது இடத்தைப் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அவரது டென்னிஸ் வாழ்க்கையின் சிறந்த தரவரிசையாக அமையும்.
இதற்கு முன்பு கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்ற தொடரில் தனது முதல் டபிள்யூ.டி.ஏ. தொடர் பட்டத்தை வென்று ஈலா அசத்தியிருந்தார். தற்போது ஹாங்காங் ஓபன் இறுதிப்போட்டி வரை முன்னேறியதன் மூலம், 2026-ம் ஆண்டை சிறப்பான முறையில் நிறைவு செய்துள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் உலகத் தரவரிசையில் முதல் 16 இடங்களுக்குள் இருக்கும் வீராங்கனைகளுக்கு முக்கிய முன்னுரிமை அளிக்கப்படும். இதனால், நான்காவது சுற்றுக்கு முன்பாக மற்றொரு முன்னணி 16 வீராங்கனையை எதிர்கொள்ள வேண்டிய நிலை இருக்காது.
எனவே, ஆஸ்திரேலிய ஓபன் தொடங்குவதற்கு முன்பும் ஈலா முதல் 16 இடங்களுக்குள் நீடித்தால், அவருக்கு இந்தச் சாதகமான வாய்ப்பு கிடைக்கும்.