டூரின்,
ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரில் தனது முதல் சாம்பியன் பட்டத்தை வென்ற அல்காரஸ், பிக் டைட்டில்ஸ் பட்டியலில் ஜானிக் சின்னரின் சாதனையை சமன் செய்துள்ளார்.
இத்தாலியின் டூரினில் நேற்று நடைபெற்ற ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் 2 முறை ஏடிபி பைனல்ஸ் சாம்பியனான அலெக்சாண்டர் ஸ்வெரெவை அல்காரஸ் எதிர்கொண்டார்.
அதில் சிறப்பாக விளையாடிய அல்காரஸ் 6-2, 7-6 (9-7) என்ற நேர் செட்களில் ஸ்வெரெவை வீழ்த்தி ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரில் தனது முதல் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இதன் மூலம் பிக் டைட்டில்ஸ் பட்டியலில் சின்னர் சாதனையை அல்காரஸ் சமன் செய்தார்.
பிக் டைட்டில்ஸ் என்பது கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், ஏடிபி பைனல்ஸ், ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 பட்டங்கள் மற்றும் ஒலிம்பிக் ஒற்றையர் தங்கப் பதக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
அல்காரஸ் இதுவரை 7 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், ஒரு ஏடிபி பைனல்ஸ் பட்டம் மற்றும் 9 மாஸ்டர்ஸ் 1000 பட்டங்கள் என மொத்தம் 17 பிக் டைட்டில்களை வென்றுள்ளார். ஒலிம்பிக் ஒற்றையர் தங்கப் பதக்கம் மட்டும் அவரது பட்டியலில் இடம்பெறவில்லை.
ஜானிக் சின்னர் 5 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், 2 ஏடிபி பைனல்ஸ் பட்டங்கள் மற்றும் 10 மாஸ்டர்ஸ் 1000 பட்டங்கள் என மொத்தம் 17 பிக் டைட்டில்களை வென்றுள்ளார்.
2026 சீசனில் அல்காரஸ் ஆஸ்திரேலிய ஓபன், பாரிஸ் மாஸ்டர்ஸ் மற்றும் ஏடிபி பைனல்ஸ் என 3 பிக் டைட்டில்களை கைப்பற்றியுள்ளார்.
ஏடிபி பைனல்ஸ் தொடரில் இதற்கு முன்பு 3 முறை பங்கேற்ற அல்கராஸ், கடந்த ஆண்டு இறுதிப்போட்டியில் சின்னரிடம் தோல்வியடைந்தார். தற்போது முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதன் மூலம் 1998-ல் அலெக்ஸ் கொரெட்ஜா வென்ற பிறகு, ஏடிபி பைனல்ஸ் பட்டத்தை வென்ற முதல் ஸ்பெயின் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.