மாட்ரிட்,
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் அடுத்த மாதம் (மே) 24-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் இருந்து 7 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவரும், கடந்த 2024, 2025-ம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் பட்டத்தை கைப்பற்றியவருமான நடப்பு சாம்பியன் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெ யின்) காயத்தில் இருந்து குணமடையாததால் விலகி இருக்கிறார்.
இந்த மாதம் தொடக்கத்தில் நடந்த பார்சிலோனா ஓபன் போட்டியின் முதல் சுற்றில் வெற்றி பெற்ற அல்காரஸ் வலது மணிக்கட்டில் ஏற்பட்ட காயத்தால் போட்டியில் இருந்து ஒதுங்கினார். அவர் காயத்தில் இருந்து முழுமையாக மீளாததால் அதன் பிறகு களம் திரும்பவில்லை. இந்த நிலையில் அவர் பிரெஞ்சு ஓபன் போட்டியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார். அத் துடன் முன்னதாக ரோமில் வருகிற 5-ந் தேதி தொடங்கும் இத்தாலியன் ஓபன் போட்டியில் இருந்தும் ஜகா வாங்கி இருக்கிறார்.
இது குறித்து அல்காரஸ் தனது எக்ஸ் தள பதிவில், 'இன்று மேற்கொள்ளப் பட்ட மருத்துவ சோதனைகளின் முடிவுகளுக்கு பிறகு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரோமில் நடைபெறும் இத்தாலியன் ஓபன் மற்றும் பாரீசில் நடக்கும் பிரெஞ்சு ஓபன் போட்டியில் பங்கேற்பதில்லை என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். இது எனக்கு ஒரு சிக்கலான தருணம், ஆனால் இதில் இருந்து வலிமையாக மீண்டு வருவோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
22 வயதான அல்காரஸ் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கிறார். இந்த விலகலால் அவரது பிரெஞ்சு ஓபன் 'ஹாட்ரிக்' பட்டத்துக்கான வாய்ப்பு காலியானது.