3-வது சென்னை ஓபன் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
இதில் ஒற்றையர் பிரிவில் தமிழக வீராங்கனை 17 வயதான மாயா முதல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று கவனத்தை ஈர்த்தார். டபிள்யூ.டி.ஏ. டூர் தொடரில் 2012-ம் ஆண்டுக்கு பிறகு கால்இறுதி சுற்றை எட்டிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்ற மாயா நேற்று கால்இறுதியில் 151-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ராபின் மான்ட்கோமெரியை எதிர்கொண்டார். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களம் கண்ட மாயாவின் சவாலை முறியடித்த மான்ட்கோமெரி 6-3, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று அரைஇறுதிக்குள் நுழைந்தார். இதன் மூலம் இந்த போட்டியில் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.
உலக தரவரிசையில் 669-வது இடம் வகிக்கும் மாயா, கால்இறுதி வரை முன்னேறியதன் மூலம் டாப்-500 இடத்திற் குள் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மான்ட்கோமெரி அரைஇறுதியில் நடப்பு சாம்பியனும், போட்டித் தரநிலையில் முதலிடம் வகிப்பவருமான ஜேனிஸ் டிஜெனை (இந்தோனேசியா) இன்று சந்திக்கிறார். முன்னதாக ஜேனிஸ் கால்இறுதியில் 5-7, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் போலினா குடெர்மித்தோவாவை (உஸ்பெகிஸ்தான்) போராடி சாய்த்தார். மற்றொரு ஆட்டத்தில் போலந்தின் மாக்டா லினெட் 4-6, 7-5, 6-4 என்ற செட் கணக்கில் மை ஹோன் டாமாவை (ஜப்பான்) விரட்டினார்.
ஒற்றையரில் தோல்வியை தழுவிய மாயாவுக்கு இரட்டையரிலும் சோகமே மிஞ்சியது. இரவில் நடந்த இரட்டையர் கால் இறுதியில் அவரும், ஸ்ரீவள்ளி பாமிதிபதியும் இணைந்து ஹாவர்லாக் (நெதர்லாந்து)- பன்னா உத்வர்தி (ஹங்கேரி) ஜோடியுடன் மல்லுக்கட்டினர். 66 நிமிடங்கள் நடந்த மோதலில் மாயா இணை 3-6, 4-6 என்ற நேர் செட்டில் தோற்று நடையை கட்டியது.
மற்றொரு கால்இறுதியில் இந்தியாவின் வைஷ்ணவி அத்கர்- ருதுஜா போசேல் கூட்டணி இங்கிலாந்தின் ஜோடி பரேஜ்- அமெரிக்காவின் மான்ட்கோமெரி இணையை 7-5, 6-4 என்ற நேர் செட்டில் தோற்கடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.