சென்னை,
3-வது சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை சகஜா யமலாபள்ளி முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறினார்.
3-வது சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில், ஐதராபாத்தை சேர்ந்த சகஜா யமலாபள்ளி தனது முதல் சுற்றில் சுவிட்சர்லாந்து வீராங்கனை சிமோனா வால்டர்ட்டை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் வால்டர்ட் கைப்பற்றினார். இதற்குப் பதிலடி கொடுத்த யமலாபள்ளி , 2-வது செட்டை 6-3 என வென்று ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டுவந்தார்.
ஆனால், வெற்றியைத் தீர்மானிக்கும் 3-வது செட்டில் 3-6 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இதனால் 4-6, 6-3, 3-6 என்ற செட் கணக்கில் சகஜா யமலாபள்ளி தோல்வியைத் தழுவி போட்டியிலிருந்து வெளியேறினார்.
இதன் மூலம் சென்னை ஓபன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனைகளில் மாயா ராஜேஸ்வரன் ரேவதி, வைஷ்ணவி அட்கர் ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய நிலையில், சகஜா யமலாபள்ளி வெளியேறினார்.