image courtesy: China Open X 
டென்னிஸ்

சீன ஓபன் டென்னிஸ்: கின்வென் ஜாங் பட்டம் வென்று சாதனை - ரூ.11 கோடி பரிசு

நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் சீனாவின் கின்வென் ஜாங், ரஷிய வீராங்கனை மிரா ஆன்ட்ரீவாவுடன் மோதினார்.

பீஜிங்,

சீன ஓபன் டென்னிசில் உள்நாட்டு வீராங்கனை கின்வென் ஜாங் முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தார். அவருக்கு ரூ.11 கோடி பரிசுத்தொகையாக கிடைத்தது.

இறுதிப்போட்டி

சீன ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பீஜிங் நகரில் நடந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ஒலிம்பிக் சாம்பியனான சீனாவின் கின்வென் ஜாங், பிரெஞ்சு ஓபன் சாம்பியனான மிரா ஆன்ட்ரீவாவுடன் (ரஷியா) மோதினார்.

கடும் சவால்

முதல் செட்டில் 5-5 என்று வரை நீயா-நானா என கடும் சவால் நீடித்தது. 11-வது கேமில் ஆன்ட்ரீவாவின் சர்வீசை முறியடித்த ஜாங், அந்த செட்டை வசப்படுத்தினார். 2-வது செட்டிலும் ஆக்ரோஷமாக ஆடிய அவர்கள் 4-4 என சமநிலையில் இருந்தனர். அதன் பிறகு அடுத்த இரு கேம்களில் ஜாங்கின் கை ஓங்கியது. இறுதியில் ஒரு ஏஸ் சர்வீசுடன் வெற்றிக்கனியை பறித்தார்.

முதல் சீன வீராங்கனை

ஒரு மணி 43 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தின் முடிவில் கின்வென் ஜாங் 7-5, 6-4 என்ற நேர் செட்டில் ஆன்ட்ரீவாவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை உச்சி முகர்ந்தார். 22 ஆண்டு கால சீன ஓபன் டென்னிஸ் வரலாற்றில் சீன வீராங்கனை ஒருவர் மகுடம் சூடுவது இதுவே முதல் முறையாகும். மொத்தத்தில் அவரது 6-வது பட்டமாகும். கின்வென் ஜாங்குக்கு ரூ.11 கோடி பரிசும், ஆயிரம் தரவரிசை புள்ளிகளும் கிடைத்தது. ஆன்ட்ரீவா ரூ.6 கோடியை பரிசாக பெற்றார்.

SCROLL FOR NEXT