பெய்ஜிங்,
சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்று வரும் சீனா ஓபன் டென்னிஸ் தொடரில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் 7-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார்.
அரையிறுதியில் ஜோகோவிச், ரஷ்யாவின் டேனில் மெத்வதேவை எதிர்கொண்டார். இதில் ஜோகோவிச் 7-5, 5-3 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது மெத்வதேவ் போட்டியில் இருந்து விலகினார். இதையடுத்து ஜோகோவிச் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் சீனா ஓபனில் ஜோகோவிச்சின் தொடர்ச்சியான வெற்றிகள் 33 ஆக உயர்ந்தன. இதன் மூலம் ஒரே தொடரில் தொடர்ந்து அதிக வெற்றிகளை பதிவு செய்த ரபேல் நடாலின் 31 (பிரெஞ்ச் ஓபன்) சாதனையை அவர் முறியடித்தார்.
பெய்ஜிங்கில் ஏற்கனவே 6 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஜோகோவிச், 2015-ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் இந்தத் தொடரில் பங்கேற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை ஜோகோவிச் எதிர்கொள்கிறார். இருவரும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், ஜோகோவிச் 3-1 என முன்னிலையில் உள்ளார்.