பீஜிங்,
ஒரு தொடரில் தோல்வியே சந்திக்காமல் அதிக வெற்றிகளை பெற்றவர் என்ற ரபெல் நடாலின் சாதனையை ஜோகோவிச் முறியடித்துள்ளார்.
சீன ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பீஜிங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒற்றையர் காலிறுதியில் ஒலிம்பிக் சாம்பியனும், முன்னாள் நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) சரிவை சமாளித்து 4-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்க ஓபன் சாம்பியனான அலெக்சாண்டர் ஸ்வெரேவை (ஜெர்மனி) தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார். ஜோகோவிச் அரையிறுதியில் ரஷியாவின் டேனில் மெட்விடேவை சந்திக்கிறார்.
சீன ஓபன் டென்னிசில் 2015-ம் ஆண்டு முதல் முறையாக ஆடிய ஜோகோவிச் இதுவரை 6 முறை மகுடம் சூடியுள்ளார். இதுவரை ஒரு ஆட்டத்தில் கூட தோற்றதில்லை. தொடர்ந்து 32 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளார்.
இதன் மூலம் 'ஓபன் எரா' வரலாற்றில் (1968-ம் ஆண்டில் இருந்து) ஒரு தொடரில் தோல்வியே சந்திக்காமல் அதிக வெற்றிகளை பெற்றவரான ஸ்பெயின் முன்னாள் வீரர் ரபெல் நடாலின் சாதனையை (பிரெஞ்சு ஓபனில் முதல் தோல்விக்கு முன்பு தொடர்ந்து 31 ஆட்டங்களில் வென்றிருந்தார்) ஜோகோவிச் முறியடித்துள்ளார்.