டென்னிஸ்

டேவிஸ் கோப்பை - இந்தியாவுக்கு அதிர்ச்சியளித்த தென்கொரியா... இறுதி சுற்று கனவு தகர்ந்தது

தென்கொரியா 3-1 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.

சியோல்,

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் இந்தியாவை வீழ்த்தி தென்கொரியா இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

வீழ்த்தியது

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் தகுதி சுற்று 2-வது ரவுண்டில் இந்தியா - தென்கொரியா அணிகள் மோதின. தென்கொரியா தலைநகர் சியோலில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற இந்தப் போட்டியில் தென்கொரியா 3-1 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.

முதல் நாள்

இந்த போட்டியின் முதல் நாளில் நடைபெற்ற இரு ஒற்றையர் ஆட்டங்களிலும் இந்திய வீரர்கள் தக்சினேஸ்வர் மற்றும் சுமித் நாகல் தோல்வி அடைந்தனர்.

இதனால் முதல் நாள் முடிவில் தென்கொரியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதையடுத்து, அடுத்த அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதி சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நெருக்கடியில் இந்திய அணி 2-வது நாளில் களம் இறங்கியது.

இந்தியாவுக்கு வெற்றி

2-வது நாளில் நடைபெற்ற இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி - தக்சினேஸ்வர் ஜோடி, தென்கொரியாவின் ஜிசுங் நாம் - உய்சுங் பார்க் இணையை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய இந்திய ஜோடி 6-3, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் தென்கொரிய ஜோடியை வீழ்த்தியது.

இதன் மூலம் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தாலும், அடுத்த 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

சுமித் நாகல் தோல்வி

இதைத்தொடர்ந்து நடைபெற்ற மாற்று ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் சுமித் நாகல், தென்கொரியாவின் சூன்வூ குவோனை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் சுமித் நாகலால் எதிர்பார்த்த அளவுக்கு ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. அவர் 1-6, 2-6 என்ற நேர்செட் கணக்கில் சூன்வூ குவோனிடம் தோல்வி அடைந்தார்.

இறுதி சுற்று

சுமித் நாகலின் தோல்வியால் தென்கொரியா 3-1 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. இதன் மூலம் தென்கொரியா 8 அணிகள் பங்கேற்கும் டேவிஸ் கோப்பை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்திய அணி இறுதி சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது.

SCROLL FOR NEXT