ரோம்,
கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக டென்னிஸ் போட்டிகளில் விளையாடாமல் இருந்த இத்தாலி வீராங்கனை கேமிலா ஜியார்ஜி, 2027-ம் ஆண்டு மீண்டும் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் களமிறங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
34 வயதான கேமிலா ஜியார்ஜி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த இரண்டு ஆண்டுகளில் தனது வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், டென்னிஸ் விளையாட வேண்டும் என்ற ஆசை மட்டும் ஒருபோதும் குறையவில்லை என்று தெரிவித்துள்ளார்.
தாய்மைப் பயணம் தனக்கு மறக்க முடியாத அனுபவத்தைத் தந்துள்ளதாகவும், மீண்டும் களமிறங்குவதற்குத் தேவையான ஆர்வமும் உற்சாகமும் இருப்பதாகவும் கூறியுள்ளார். மீண்டும் விளையாடுவதற்கு கடினமாக உழைக்க வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்துள்ளதாகவும், படிப்படியாக தனது டென்னிஸ் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
2027-ம் ஆண்டு கம்பேக் கொடுக்கத் தயாராகும் ஜியார்ஜியின் குழுவில் மார்கோ பனிச்சி இடம்பெற்றுள்ளார். இவர் முன்னதாக டென்னிஸ் நட்சத்திரங்களான நோவக் ஜோகோவிச், ஜானிக் சின்னர் ஆகியோருக்கு உடல்தகுதிப் பயிற்சியாளராகப் பணியாற்றியவர். ஜியார்ஜியின் உடல்தகுதிப் பயிற்சியை அவர் மேற்பார்வையிட உள்ளார்.
அதே நேரத்தில், அர்ஜென்டினாவைச் சேர்ந்த முன்னாள் டென்னிஸ் வீரர் ஆண்ட்ரியாஸ் இக்னாசியோ பசுட்டி, ஜியார்ஜியின் தலைமைப் பயிற்சியாளராகச் செயல்பட உள்ளார்.
ஜியார்ஜி 2018-ம் ஆண்டு உலகத் தரவரிசையில் 26-வது இடம் வரை முன்னேறியவர். தனது டென்னிஸ் வாழ்க்கையில் 4 சர்வதேச ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ளார்.
2021-ம் ஆண்டு கனடா ஓபன் தொடரில் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது அவரது மிகப்பெரிய சாதனையாகும். விம்பிள்டன் தொடரில் 2018-ம் ஆண்டு காலிறுதிக்கும் முன்னேறியுள்ளார்.
கடைசியாக 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் மியாமி ஓபன் தொடரில் விளையாடிய அவர், 2-வது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக்கிடம் தோல்வியடைந்தார்.
தற்போது 2027-ல் மீண்டும் களமிறங்குவதாக அறிவித்துள்ளார். குழந்தை பிறந்த பிறகு மீண்டும் டென்னிஸ் களத்துக்குத் திரும்பும் அவரது ஆட்டத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.